தமிழக அரசின் முழு உடல் பரிசோதனை திட்டம்: ஆசிரியர்கள் பிப்.28-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

சென்னை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்துக்கு பிப்ரவரி 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வதற்கான அறிவிப்பு 2023-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் முதல்கட்டமாக 50 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.1.50 லட்சம் என 38 மாவட்டங்களுக்கும் ரூ.57 லட்சம் தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு மேமோகிராம், இசிஜி, எக்ஸ்ரே உட்பட 16 வகையான மருத்துவ பரிசோதனை செய்யப்படவுள்ளன. இதையடுத்து மாவட்டந்தோறும் 50 வயதை கடந்த ஆசிரியர்களில் வயது மூப்பு அடிப்படையில் 150 ஆசிரியர்களை முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தில் பயன் பெற தேர்வு செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை தகுதியான ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பிப்.28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்ந்து விண்ணப்பங்களை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள்பரிசீலனை செய்து 150 ஆசிரியர்களை தேர்வுசெய்ய வேண்டும். மேலும், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரங்களை மாவட்ட மருத்துவத் துறை அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் உடல் நல பரிசோதனைக்கான கால அட்டவணையை தயாரித்து, அதன் தகவல்களை தேர்வான ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.