பிரயாக்ராஜ்: “மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் மக்கள் தாங்களாகவே ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசு நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சியை நான் பாராட்டுகிறேன்” என முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் மகா கும்பமேளா தொடங்கியது. வரும் 26-ம் தேதியுடன் இந்த நிகழ்வு நிறைவு பெறுகிறது. இந்நிலையில், இது குறித்து முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியது: “மக்கள் தாங்களாகவே ஒழுக்கத்தை கடைப்பிடிக்கின்றனர். மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்ட மாநில அரசு நிர்வாகத்தை பாராட்டுகிறேன். இங்கு குழுமியுள்ள கூட்டம் மகத்தானது. உலக அளவில் இது மக்களின் மிகப் பெரிய சங்கமம் ஆகும். புராண ரீதியாக பார்த்தால் இது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற மகா கும்பமேளா. அதனால் இயல்பாகவே இதில் கூட்டம் அதிகம் இருக்கும்.
மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதன்போது ஒழுக்கத்தை அவர்களாவே கடைபிடிக்கிறார்கள். அதோடு மக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக தங்கும் வசதி, குளியல், சுகாதாரம் என பல்வேறு விஷயங்களை உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்வு சார்ந்த பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், அரசு அதிகாரிகள் என அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.
“மகா கும்பமேளா இப்போது மிருத்யு கும்பமேளா (மரண கும்பமேளா) ஆக மாறிவிட்டது” என்று கடுமையாக விமர்சித்துள்ளது குறித்து வெங்கய்ய நாயுடுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “அரசியல் ரீதியான கருத்து குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. நான் அரசியலில் இல்லை. அந்த கருத்தின் தன்மை அரசியல் சார்ந்து உள்ளது. இது அரசியல் பேசுவதற்கான நேரம் அல்ல. இந்த புனித நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு மனித நேயம் மற்றும் தேசத்தின் நலனுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்” என அவர் கூறினார்.