சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ. 20 லட்சம் வழிப்பறி சம்பவ வழக்கில், வருமான வரித்துறை அதிகாரிகள் ஜாமீன் கோரிய மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் கடந்தாண்டு டிச.15ம் தேதி அன்று ரூ. 20 லட்சத்துடன் வந்த தனியார் நிறுவன ஊழியரான முகமது கவுஸ் என்பவரை ஹவாலா பணம் எனக்கூறி காரில் கடத்தி, அதில் ரூ. 15 லட்சத்தை வழிப்பறி செய்த வழக்கில் சிறப்பு எஸ்ஐ-க்கள் ராஜா சிங், சன்னிலாய்டு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதேபோல் ஆயிரம் விளக்கு பகுதியில் கடந்தாண்டு டிச.11ம் தேதி அன்று ராயபுரத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி கொண்டு வந்த ரூ. 40 லட்சத்தை இதே பாணியில் வழிப்பறி செய்து அதில் ரூ. 20 லட்சத்தை எடுத்துக்கொண்டு, எஞ்சிய ரூ. 20 லட்சத்தை அவரிடமே திருப்பி ஒப்படைத்து வி்ட்டதாக தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக உதவி எஸ்ஐ-க்கள் ராஜாசிங், சன்னிலாய்டு, வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் சுரேஷ், சதீஷ், பாபு ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வணிகவரித்துறை அதிகாரிகள் மட்டும் தலைமறைவாகவுள்ளனர். மற்ற 5 பேரும் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 3 பேரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ஏற்கெனவே திருவல்லிக்கேணி வழிப்பறி வழக்கில் உயர் நீதிமன்றம் தங்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கிலும் ஜாமீன் வழங்க வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாமல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்களை கைது செய்திருப்பதாக வாதிடப்பட்டது.
அப்போது காவல் துறை தரப்பில், இந்த வழக்கின் புலன் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. காவல்துறை, வருமான வரித்துறை, வணிக வரித்துறை அதிகாரிகள் கூட்டணி அமைத்து திட்டமிட்டு வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இந்த 2 பேர் தவிர வேறு யாரிடமும் இதற்கு முன்பாக இவர்கள் தங்களது கைவரிசையைக் காட்டியிருக்கிறார்களா? என்பதையும் தீர விசாரிக்க வேண்டியுள்ளது.
சென்னைக்கு பணத்துடன் வரும் நபர்களை நோட்டமிட்டு, துப்பு துலக்கி ஹவாலா பணம் என மிரட்டி, வழிப்பறியில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவ்வாறு வழிப்பறி செய்யும் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர். இவர்களுக்குப் பின்னால் வேறு யாரும் இருக்கிறார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
இந்த வழக்கில் ரூ. 20 லட்சத்தை அனைவரும் பகிர்ந்து கொண்டதாக சிறப்பு எஸ்ஐ சன்னிலாய்டு வாக்குமூலம் அளித்துள்ளார். 3 பேர் தலைமறைவாகவுள்ள நிலையில் இவர்களுக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது, என கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்களான வருமான வரித்துறை அதிகாரிகள் மூவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.