ஜாம்நகர்: குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
குஜராத்தில் கடந்த ஜன.16 அன்று உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 2023-ம் ஆண்டு குஜராத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் தேர்தல் இது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக 68 நகராட்சிகளில் 60-ஐ கைப்பற்றி அமோக வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜாம்நகர் நகராட்சியில் 15 வார்டுகளைச் சேர்ந்த 60 இடங்களில் 48 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்கள் கிடைத்துள்ளன.
காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு நகராட்சியிலும், சமாஜ்வாதி கட்சி இரண்டு நகராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஜாம்நகர் உடன், குஜராத் முழுவதும் 68 நகராட்சிகள் மற்றும் காந்திநகர், கபத்வஞ்ச் மற்றும் கத்லால் ஆகிய மூன்று தாலுகா பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு 60 நகராட்சிகள், மூன்று தாலுகா பஞ்சாயத்துகளில் பாஜக அமோக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாஜகவுடனான குஜராத்தின் பிணைப்பு உடைக்க முடியாதது மட்டுமல்லாமல், நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தேவபூமி துவாரகா மாவட்டத்தின் சலயா நகராட்சியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் 14 நகராட்சிகளை பெரும்பான்மையுடன் கைப்பற்றியது. சுயேச்சைகளின் ஆதரவுடன் மஹுதா மற்றும் ஜலோட் நகராட்சிகளிலும் அது வெற்றி பெற்றது. தற்போது, இந்த நகராட்சிகளில் பெரும்பாலானவற்றை காங்கிரஸிடமிருந்து பாஜக கைப்பற்றியுள்ளது.