சென்னை: “இந்தியைத் திணித்தால் இன்னொரு மொழிப் போரை சந்திக்க தமிழகம் தயங்காது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்தார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் இண்டியா கூட்டணி சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது: “மொழி, கல்வி, நிதி உரிமைக்காக போராட்டம் நடத்துகிறோம். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. தமிழகத்தை ஒருபோதும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது.
தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் இருமொழிக் கொள்கையில் படித்தவர்களில் 99 சதவீதம் பேர் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். இந்தியை அனுமதித்த ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தங்களது தாய்மொழியை இழந்துள்ளன. தமிழகத்தில் அனுமதித்தால் அந்த மாநிலங்களின் நிலைதான் ஏற்படும்.
தமிழகம் ஒருபோதும் மும்மொழியை ஏற்காது. இந்தி திணிப்பைக் கைவிடாவிட்டால் இன்னொரு மொழிப் போரை சந்திக்க தமிழகம் தயங்காது. தங்கள் கட்சிப் பெயரில் அண்ணாவையும், திராவிடத்தையும் வைத்துள்ள அதிமுக, மும்மொழிக் கொள்கையை எதிர்த்து நடத்தும் போராட்டங்களில் எங்களைப் பற்றி அவதூறு பேசாமல், அரசியல் செய்யாமல் தெருவில் வந்து போராட வேண்டும்.
இந்தியை திணிக்க முற்பட்டால் அதைத் தடுத்து தமிழ் மொழியைக் காக்க ஆயிரம் பேர் உயிரைக் கொடுக்க தயாராக இருக்கிறோம். தமிழகத்திற்கான நிதியைத் தராவிட்டால் இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக மாறும். ‘கோ பேக் மோடி’ என்ற மக்கள்,
‘கெட் அவுட் மோடி’ என சொல்லும் நிலை வரும். இந்தப் போராட்டம் முடிவுக்கு வருவதும் தொடர்வதும் மத்திய அரசின் கையில்தான் உள்ளது” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இந்த ஆர்ப்பட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பின் உதயநிதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்கத் துடிக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து, தி.மு.கழகம் தலைமையிலான கூட்டணி சார்பில் இன்று சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோம்.
முதல்வர் ஸ்டாலினின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஒருபோதும் இந்தித் திணிப்பை, மும்மொழிக் கொள்கையை ஏற்காது என்றும், நம் மாணவர்களின் கல்விக்கான நிதியை விடுவிக்க, மும்மொழிக் கொள்கையை ஏற்கச் சொல்லி மிரட்டும் ஒன்றிய பாசிச பாஜக அரசின் இந்த அராஜகப் போக்கு தமிழ் மண்ணில் இன்னொரு இந்தித் திணிப்பு எதிர்ப்பு அறப்போருக்குத் தான் வழிவகுக்கும் என்றும் உரையாற்றினோம்.
நம் மாணவர்களின் கல்வியின் மீதும், உயிருக்கு நிகரான தமிழ் மொழி மீதும் கை வைக்க நினைக்கும் பாசிஸ்ட்டுகளின் திட்டத்தை வீழ்த்த, கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் ஓரணியில் நின்று எதிர்ப்போம் என அழைப்பு விடுத்தோம்” என்று கூறியுள்ளார்.