கோயில் பராமரிப்பு, வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
டெம்பிள் கனெக்ட் நிறுவனம் சார்பில் திருப்பதி ஆஷா அரங்கில் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நேற்று மாலை தொடங்கியது. 19ம் தேதி வரை 3 நாட்கள் வரை நடைபெற உள்ள இந்த மாநாட்டில், 58 நாடுகளில் இருந்து இந்து, பவுத்த, சமண மற்றும் சீக்கிய மதங்களை சேர்ந்த 1,581 கோயில்கள் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கோயில் பராமரிப்பு, கலாச்சாரம், நிர்வாகம், கோயில்களின் வளர்ச்சி, கோயில்களில் தொழில்நுட்பம், அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
மாநாட்டில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தனர்.
இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், “கடவுளுக்கு சேவை செய்வதே அனைத்து கடமைகளிலும் முதன்மையானது. நம் நாட்டில் ஏறக்குறைய 27,000 கோயில்கள் உள்ளன. இதில் ஆண்டுக்கு சராசரியாக 21 கோடி பக்தர்கள் கோயில்களுக்கு சென்று சுவாமியை வழிபட்டு வருகின்றனர். நமது கலாச்சாரத்தை நாம்தான் ஊக்குவிக்க வேண்டும். ஆந்திராவில் கோயில் வருடாந்திர பராமரிப்பு செலவுக்கு ரூ.134 கோடி ஒதுக்கப்படுகிறது.
இந்து, சீக்கிய மதம், பவுத்தம், சமணம் என அனைத்தும் இந்தியாவில் உருவானவை. நாம் அனைவரும் சகோதரர்களை போல் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். கோயில் பராமரிப்பு, வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.
ஆந்திராவில் அனைத்து கோயில்களிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு விட்டன. தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கோயில்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
மாநாட்டில் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாத நாயக், ஆந்திர அமைச்சர் சத்யபிரசாத், அனிதா மற்றும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கோயில்களின் நிர்வாக அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.