திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் காரிய வட்டம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்து வரும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர், தன்னை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து துன்புறுத்தியதாக முதல்வரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் ராகிங் தடுப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு நடத்திய விசாரணையில், கடந்த 11-ந்தேதி சீனியர் மாணவா்களுக்கும், ஜூனியர் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் 3-ம் ஆண்டு மாணவர்கள் 7 பேர் சேர்ந்து 2 ஜூனியர் மாணவர்களை தாக்கி உள்ளனர். இதுபற்றி 2 பிரிவினரும் கழக்கூட்டம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதும் தெரியவந்தது.
மேலும், இந்த சம்பவத்திற்கு பிறகும் சீனியர் மாணவர்கள் 7 பேரும் சேர்ந்து ஒரு மாணவரை கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியதோடு, சட்டையை கிழித்து முட்டி போடவைத்து முகத்தில் தாக்கி உள்ளனர். பின்னர், எச்சில் துப்பிய தண்ணீரை குடிக்கச்சொல்லி துன்புறுத்தியதும் ராகிங் தடுப்பு குழு விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 7 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.