Samuthirakani: “கனி அண்ணே! இன்னைக்கு இந்த மேடையில…'' – நெகிழ்ந்த முத்துக்குமரன்

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியிருக்கிற `ராமம் ராகவம்’ திரைப்படம் வருகிற 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்களான தீபக், முத்துக்குமரன் என இருவரும் சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய தீபக், “என்னுடைய குருநாதர் சமுத்திக்கனி சார் இயக்கிய சீரியல்லதான் முதன் முதலாக நான் நடிக்க ஆரம்பிச்சேன். சின்னத்திரையில ஒரு வெற்றி இயக்குநராக வலம் வந்தாரு. அதன் பிறகு சினிமாவுக்குப் போய் படங்கள் இயக்கினார். அந்தப் படங்களெல்லாம் பேசப்பட்டதே தவிர பெரிதளவுல வரவேற்பை பெறல. அப்புறம் மறுபடியும் சின்னத்திரைப் பக்கம் வந்தாரு. மறுபடியும் `நான் சாதிக்க வேண்டியது நிறையா இருக்கு’ன்னு சினிமாவுக்கு வந்தாரு. அந்த முறை உதவி இயக்குநராக வேலைக்குச் சேர்ந்து படங்கள் இயக்கினாரு.

தீபக் – பிக் பாஸ்

இப்போ பெரிய நடிகராக உருவெடுத்து நிற்கிறாரு. அதுக்குப் பிறகும் அவர் நிற்கவே இல்ல. எப்பவும் ` வாழ்க்கையில நாம சாதிக்க வேண்டிய விஷயங்கள் அதிகமாக இருக்கு டா’னு சொல்லிட்டே இருப்பாரு. `நம்முடைய ஓய்வு காலத்துல திரும்பி பார்க்கும்போது நம்முடைய 20 படைப்புகளாவது இருக்கணும்னு’ கனி சார் சொல்லிட்டே இருப்பாரு. இன்னைக்கு அவருடைய மகனாக என்னை பாவித்து ஒரு அங்கீகாரம் கொடுத்தது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. இந்தப் படம் ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவைப் பேசுது. நானும் ஒரு தந்தைதான். ஒரு வயதுக்கு மேல எனக்கும் என் மகனுக்குமான உறவு எப்படி இருக்கும்னு நான் இந்தப் படத்தின் மூலமாக பார்க்கப்போறேன்.” என்றார்.

இவரை தொடர்ந்து வந்துப் பேசிய முத்துக்குமரன், “ ஒரு பத்திரிகையாளராக கனி அண்ணனை `தலைக்கூத்தல்’ படத்துக்காக நேர்காணல் பண்ணியிருக்கேன். இன்னைக்கு இந்த மேடையில நிக்கிறது கொஞ்சம் பதட்டமாகதான் இருக்கு. பரபரப்பாக ஓடிக்கிட்டு இருக்கிற இந்த மானுட சமூகத்தை நிறுத்தி பொதுவுடைமையையும், பொதுவாக நம்ம அலட்சியப்படுத்துற நம் தந்தை, தாய் போன்ற உறவுகளின் உணர்வுகளை கொஞ்சம் சத்தமாக சொல்லி மனுஷன் மனுஷனாக வாழ்றதுக்கான வழியைப் போட்டுக் கொடுத்த எளிய மனிதர் கனி அண்ணன். கனிவான அகத்துக்கும் கடுமையான முகத்துக்கும் சொந்தக்காரராக இருக்கக்கூடிய தந்தைகளுக்கான ஒரு உருவம் தயாரிக்கணும்னா அதுதான் சமுத்திரக்கனி அண்ணன்.

முத்துக்குமரன் – பிக் பாஸ்

`பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்த்தல் அதனினும் இலமே’னு கனியன் பூங்குன்றன் சொன்ன வார்த்தைக்கான அடையாளமாக இந்தச் சிறுவனை இந்த மேடையில உட்கார வச்ச கனி அண்ணனுக்கு மீண்டுமொரு பெரிய நன்றி. `நான் வீழ்ந்துவிட்டால் என்ன, என் துப்பாக்கியை ஏந்திக் கொள்ள என் தோழர்கள் தயராக இருக்கிறார்கள். தோட்டாக்கள் ஒருபோதும் தூங்குவதில்லை’னு சே குவேரா சொல்லுவாரு. அப்படி அவருடைய தோட்டாக்களை ஏந்துவதற்கான இயக்குநர்களை தொடர்ந்து உருவாக்கிக்கிட்டே இருக்கும் இந்த சமுத்திரம் என்றும் வற்றாது என்கிற பெரிய நம்பிக்கை இருக்கு.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.