புதுடெல்லி: டெல்லி பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 11 நாட்கள் கடந்து, 27 ஆண்டுகளுக்கு பின்பு தலைநகரில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் புதிய முதல்வரை முடிவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு கூட இருக்கிறார்கள்.
டெல்லியின் அடுத்த முதல்வர் நாளை (வியாழக்கிழமை) ராம்லீலா மைதானத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் பதவி ஏற்க இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல்வர் யார் என்றே அறிவிக்காமல் விழா ஏற்பாடுகள் நடைபெறுவதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து பாஜகவினர் இன்னும் மவுனம் காத்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை தோற்கடித்த பாஜகவின் பர்வேஷ் வர்மா, ரேகா குப்தா, விஜயேந்தர் குப்தா, சதிஸ் உபாத்யாய்,. ஆஷிஸ் சூட், பவன் ஷர்மா மற்றும் அஜய் மஹாவர் ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில், “பாஜக கட்சி அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூடியதும், கூட்டம் தொடங்கும். எம்எல்ஏகள் மாலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் அங்கு கூடுவார்கள். மத்திய தலைமையின் சார்பில் மூத்த தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள். கூட்டம் முடிந்த பின்பு புதிய முதல்வரின் பெயர் அறிவிக்கப்படும்.
டெல்லியின் முதல்வரை குடியரசுத் தலைவரே நியமிக்கிறார். பாஜக எம்எல்ஏக்கள் தேர்வு செய்யும் முதல்வரின் பெயரை துணைநிலை ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார். அவரின் ஒப்புதலுக்கு பின்பு, துணைநிலை ஆளுநர் புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பும் செய்து வைப்பார்.” என்று தெரிவித்தனர்.
புதிய அமைச்சரவையில், ஜாட், தலித், பூர்வாஞ்சலிகள், சீக்கியர்கள், உத்தராகண்டி, பனியாக்கள் இடம்பெற்றிருப்பர் என்று கூறப்படுகிறது. இதனிடையே, சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்துக்கு முன்பாக கட்சி அலுவலகத்தில் டெல்லியில் பாஜக அரசு என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளன. அலுவலகத்தில் வருபவர்களை வரவேற்கும் விதமாக கொடிகள், அலங்காரங்கள், சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்பட்டுள்ளன.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறத் தவறியிருந்தாலும், டெல்லியில் பெற்றிருக்கும் தனித்த வெற்றி, அரசியல் மேலாதிக்கம் பெற்ற கட்சி என்ற பாஜகவின் கூற்றை வலுப்படுத்துவதாய் உள்ளது. முன்னதாக, மகாராஷ்டிராவில் கிடைத்த மகத்தான வெற்றியும், ஹரியானாவில் கிடைத்த எதிர்பாராத வெற்றியும் இந்தக் கூற்றுக்கு வலுசேர்த்தன.