திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல எல்.முருகனுக்கு அனுமதி மறுப்பு: டிஜிபிக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: திருப்பரங்குன்றத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது அதிகார துஷ்பிரயோகம் என தமிழக டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கடந்த 17-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணியர் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில்களுக்குச் செல்ல முயன்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதற்கு எல். முருகன் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 17-ம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் எல்.முருகனை, கோயிலுக்குச் செல்வதை தடுக்கும் முயற்சியில், பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழக காவல்துறையினர் ஈடுபட்டனர். இதன்மூலம், அவர்கள் இந்த விவகாரத்தை தவறாகக் கையாண்டதை தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை தருவது உட்பட, அமைச்சரின் பயணத் திட்டம் தொடர்பாக தமிழக காவல்துறையின் முன்அனுமதி பெற்றிருந்த போதிலும், கோயிலின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரால் அமைச்சர் தடுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்ட கோயில்களுக்குச் செல்வதற்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அமைச்சர், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, ​​கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததாக அதிகாரிகள் பதிலளித்துள்ளனர் என்பது கூடுதல் வருத்தத்தை அளிக்கிறது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அவர் விரும்பும் இடத்தில் வழிபடும் உரிமையை பறிப்பதன் மூலம் காவல்துறையினர் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமீப காலமாக தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ள சூழலில், இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே கடுமையான சந்தேகத்தை எழுப்புகிறது.

நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் உள்ள ஒருவரே இப்படி அவமானப்படுத்தப்பட்டால், நமது மாநிலத்தில் சாதாரண மக்களின் நிலை என்ன?.” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.