புதுடெல்லி: புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரும், தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியும் இன்று (பிப்.19) பொறுப்பேற்றனர்.
தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜிவ் குமார் நேற்று (பிப். 18) ஓய்வு பெற்றதை அடுத்து, தேர்தல் ஆணையராக இருந்து வந்த ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக இன்று பொறுப்பேற்றார். புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவேக் ஜோஷியும் இன்று பொறுப்பேற்றார்.
தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு ஞானேஷ் குமார் வெளியிட்ட முதல் செய்தியில், “தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முதல் பணி வாக்களிப்பது. எனவே, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும், எப்போதும் வாக்களிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் நேற்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது, நாளையும் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைமை தேர்தல் ஆணையர்: தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரும் தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக புதிய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு டெல்லியில் நேற்று முன்தினம் இரவு கூடியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபம் தெரிவித்தார். தேர்வு குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு முடிவு எடுக்கலாம் என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியிடப்பட்ட அரசாணையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று அவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
அடுத்து வரும் தேர்தல்கள்: தலைமைத் தேர்தல் ஆணையர் 6 ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் வரை பதவியில் நீடிக்கலாம். இதன்படி புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வரும் 2029-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி வரை பதவியில் நீடிப்பார். இந்த ஆண்டு இறுதியில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 2027-ம் ஆண்டில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்கள் புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மேற்பார்வையில் நடைபெறும்.
தேர்தல் ஆணையர் விவேக் ஜோஷி: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டத்தில் புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதற்கு ராகுல் காந்தி ஆட்சேபம் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு புதிய தேர்தல் ஆணையரை நியமிக்கலாம் என்று அவர் கூறினார். எனினும் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் (பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா) முடிவின்படி ஹரியானா தலைமைச் செயலாளர் விவேக் ஜோஷி புதிய தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 1966-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி உத்தர பிரதேசத்தில் விவேக் ஜோஷி பிறந்தார். அவருக்கு தற்போது 58 வயதாகிறது. வரும் 2031-ம் ஆண்டு வரை அவர் பதவியில் நீடிப்பார். மற்றொரு தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சாந்து வரும் 2028-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். எனவே ஞானேஷ் குமாருக்கு பிறகு தலைமை தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியே பதவியேற்பார். வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் அவரது மேற்பார்வையில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
யார் இந்த விவேக் ஜோஷி: கடந்த 1964-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி உத்தர பிரதேசத்தின் கான்பூரில் ஞானேஷ் குமார் பிறந்தார். கான்பூர் ஐஐடியில் பி.டெக் பட்டம் பெற்ற இவர், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திலும் பட்டம் பெற்றார். கடந்த 1988-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். கேரள பேட்ச் அதிகாரியான இவர் பல்வேறு மத்திய அரசு துறைகளில் பணியாற்றினார்.
கடந்த 2019-ம் ஆண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது மத்திய உள்துறையின் கூடுதல் செயலாளராக ஞானேஷ் குமார் பணியாற்றினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை நிறுவ ஞானேஷ் குமார் முக்கிய பங்கு வகித்தார். இறுதியாக கூட்டுறவுத் துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்கிறார்.