புதுடெல்லி: டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரை பாஜக நியமித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி மாநில சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய பார்வையாளர்களாக, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் மற்றும் பாஜகவின் தேசியச் செயலாளர் ஓம் பிரகாஷ் தங்கர் ஆகியோரை பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்டக் குழு நியமித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
டெல்லியின் பாஜக முதல்வரை முடிவு செய்ய, தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில், “பாஜக கட்சி அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூடியதும், கூட்டம் தொடங்கும். எம்எல்ஏகள் மாலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் அங்கு கூடுவார்கள். மத்திய தலைமையின் சார்பில் மூத்த தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள். கூட்டம் முடிந்த பின்பு புதிய முதல்வரின் பெயர் அறிவிக்கப்படும்.
டெல்லியின் முதல்வரை குடியரசுத் தலைவரே நியமிக்கிறார். பாஜக எம்எல்ஏக்கள் தேர்வு செய்யும் முதல்வரின் பெயரை துணைநிலை ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார். அவரின் ஒப்புதலுக்கு பின்பு, துணைநிலை ஆளுநர் புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பும் செய்து வைப்பார்.” என்று தெரிவித்தனர்.
டெல்லியின் அடுத்த முதல்வர் நாளை (வியாழக்கிழமை) ராம்லீலா மைதானத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் பதவி ஏற்க இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது.
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்கள் மட்டுமே பெற்றது. டெல்லி முன்னாள் முதல்வர் அர்விர்ந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் தோல்வி அடைந்தார். கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு இத்தேர்தல் பெரிய பின்னடைவாக அமைந்தது. மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரஸ் மூன்றாவது முறையாக அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு தீவிரம் அடைந்துள்ளது. முதல்வர் பதவிக்கு பர்வேஷ் வர்மா, விஜேந்தர் குப்தா உள்ளிட்ட தலைவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. புதுடெல்லி தொகுதியில் அர்விந்த் கேஜ்ரிவாலை தோற்கடித்ததன் மூலம் பர்வேஷ் வர்மா வலுவான போட்டியாளராக உருவெடுத்துள்ளார்.
டெல்லி முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான இவர், மேற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றுள்ளார். டெல்லியில் பாஜகவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய ஜாட் சமூகத்தின் வலுவான பிரதிநிதியாக அறியப்படுகிறார்.
முடிவுக்கு வரும் சட்டப்பேரவையில் பாஜக தலைவராக இருந்த விஜேந்தர் குப்தாவின் பெயரும் முதல்வர் பதவிக்கு பரசீலிக்கப்படுகிறது. இவர் ரோகிணி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். மாநில அரசை வழிநடத்தும் திறன் கொண்ட ஒரு அனுபவம் வாய்ந்த தலைவராக அவர் பார்க்கப்படுகிறார். இவர்கள் தவிர டெல்லி பாஜக முன்னாள் தலைவர்கள் சதீஷ் உபாத்யாய, வீரேந்திர சச்தேவா ஆகியோருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகளும் பிரபல வழக்கறிஞருமான பன்சூரி ஸ்வராஜ், டெல்லி முன்னாள் முதல்வர் மதன்லால் குரானாவின் மகன் ஹரிஷ் குரானா ஆகியோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு அடிபடுகின்றன. ம.பி., உ.பி.யை போல பரந்த சமூகப் பிரதிதித்துவத்தை உறுதிசெய்ய இரு துணை முதல்வர்களும் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.