அர்ஜென்டினாவில் அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பியூனஸ் அயர்ஸ்,

அர்ஜென்டினாவில் அதிபர் ஜேவியர் மிலே (வயது 54) தலைமையிலான வலதுசாரி லிபர்டி அட்வான்சஸ் கூட்டணி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவர் லிப்ரா என்ற கிரிப்டோகரன்சி குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சிறு வணிகங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு நிதியளிக்க லிப்ரா உதவும் என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அதனை வாங்குவதற்கான இணைப்பையும் அதில் பகிர்ந்து கொண்டார். இதனால் அந்த பங்கின் விலை உயர்ந்தது. இதன்மூலம் கிரிப்டோகரன்சியை விளம்பரப்படுத்துவதாக கூறி அதிபருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. எனவே சில மணி நேரங்களில் எக்ஸ் தளத்தில் இருந்து அந்த பதிவை ஜேவியர் மிலே நீக்கினார்.

இதனால் முதலீட்டாளர்கள் பலர் தங்களது பணத்தை இழந்தனர். இதனை தொடர்ந்து அதிபர் ஜேவியர் மிலேவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவும் பிரதான எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த சூழலில் அர்ஜென்டினாவில் உள்ள வழக்கறிஞர்கள் அதிபருக்கு எதிராக மோசடி புகார்களை தாக்கல் செய்தனர். இதனிடையே அதிபர் ஜேவியர் மிலே மீதான மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிபதி ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறும், தான் நல்லெண்ணத்துடன் செயல்பட்டதாகவும் அதிபர் ஜேவியர் மிலே தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.