வாரணாசி: காசி தமிழ்ச் சங்கமத்தின் மூன்றாவது ஆண்டு நிகழ்வில் பங்கேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் குழுவினர் காசி ஹனுமன் படித்துறை பகுதியில் கங்கையில் புனித நீராடினர்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக கல்வி அமைச்சகத்தால் காசி தமிழ்ச் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் ஆண்டு நிகழ்வில் பங்கேற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் குழுவினர் காசி ஹனுமன் படித்துறையில், கங்கையில் புனித நீராடி, பிரார்த்தனை செய்தனர். அங்கு இருந்த வேத விற்பன்னர்கள், பல்வேறு படித்துறைகளின் வரலாறு குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
கங்கையில் புனித நீராடிய பின், அவர்கள் படித்துறையை ஒட்டியுள்ள பழங்கால கோயில்களில் பிரார்த்தனை செய்தனர். கோயில்களின் வரலாறு, பிரம்மாண்டக் கட்டமைப்பு மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் பற்றிய விவரங்கள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, ஹனுமன் படித்துறையில் உள்ள சுப்பிரமணிய பாரதியின் வீட்டிற்கு சென்ற தமிழக பிரதிநிதிகள், அங்கு அவரது குடும்பத்தினரை சந்தித்தனர். பார்வையாளர்கள் அவரது வாழ்க்கை மற்றும் பணிகளைப் பற்றி அறிய மிகுந்த ஆர்வம் காட்டினர். அவரது வீட்டிற்கு அருகிலுள்ள நூலகத்தையும் ஆய்வு செய்து சேகரிப்பு குறித்த தகவல்களையும் சேகரித்தனர்.
பின்னர், காஞ்சி மடத்திற்குச் சென்று அதன் வரலாற்றை அறிந்து கொண்டனர். காசியில் தென்னிந்திய பாணியில் கட்டப்பட்டுள்ள கோயிலை கண்டு பலரும் உற்சாகமடைந்தனர். வெங்கட்ராமன் கணபதி என்பவர், காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பை விவரித்தார்.
ஹனுமன் படித்துறை, கேதார் படித்துறை, ஹரிச்சந்திர படித்துறை ஆகியவை தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இருப்பிடமாக உள்ளன என்றும், இது இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான நீடித்த தொடர்பை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார். ஹனுமன் படித்துறையில் மட்டும் 150-க்கும் அதிகமான வீடுகள் தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமானவை என்றும், அவர்கள் வாழும் வீதிகளில்தான் காசி தமிழ் சங்கமம் தினமும் நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார்.
“காசி விஸ்வநாதர் கோயில் பிரம்மாண்டமாக மாறி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சியால், காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு பயணம் மேற்கொண்டோம். இது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் குழுவைச் சேர்ந்த ராமன் தெரிவித்தார்.