நியூயார்க்: அரசியல் காரணமாக சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் எட்டு மாதங்களாக சிக்கி உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். தனியார் ஊடக நிறுவன நேர்காணலில் அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் மஸ்க் பங்கேற்றபோது இதை தெரிவித்துள்ளார்.
“அரசியல் காரணங்களால் அமெரிக்காவின் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி உள்ளனர். முந்தைய அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அவர்களை பூமிக்கு அழைத்து வரும் பணியை ஸ்பேஸ் எக்ஸ் துரிதமாக மேற்கொண்டது. இருந்தாலும் அது பல்வேறு காரணங்களால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. அவர்களை பூமிக்கு அழைத்து வருவதில் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளோம். இதற்கு முன்பு எங்களது நிறுவனம் விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளி வீரர்களை பூமிக்கு பத்திரமாக அழைத்து வந்துள்ளது” என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
மார்ச் 19-ம் தேதி ரிட்டர்ன்: மார்ச் 12-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் (க்ரூ-10) பூமியில் இருந்து புறப்படுகிறது. அந்த விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்துடன் டாக் (இணைப்பு) ஆனதும், அதே விண்கலனில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புகின்றனர். அவர்கள் மார்ச் 19-ம் தேதி அங்கிருந்து பூமிக்கு புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை ஜூன் 6-ம் தேதி அடைந்தனர். அப்போது முதல் அவர்கள் இருவரும் அங்கேயே உள்ளனர். அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்தது.
விண்வெளி மையத்தில் சுமார் ஆறு மாத காலத்துக்கும் மேலாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் வரும் மார்ச் மாதத்தின் பிற்பாதியில் தான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.