புதுடெல்லி: இன்று மாலை டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். அவர் நாளை (பிப்.20) பதவியேற்கிறார்.
டெல்லியின் பாஜக முதல்வரை முடிவு செய்ய, அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (பிப்.19) இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் பாஜகவின் 48 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இதில் டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா அவர்களை வரவேற்றார்.
தொடர்ந்து டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். பாஜக ஆளும் மாநிலங்களில் தற்போது பெண் முதல்வர்கள் எவருமே இல்லை. இதனால், எதிர்கட்சிகளின் மிகவும் முக்கியத் தலைவரான மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பதிலளிக்கும் வகையில் டெல்லியின் முதல்வராக ஒரு பெண் அமரும் வாய்ப்புகளும் உள்ளன என ‘இந்து தமிழ் திசை’ நேற்று வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தது. அது தற்போது உறுதியாகி உள்ளது.
டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் நாளை மாலை 4.00 மணிக்கு துணைநிலை ஆளுநர் புதிய முதல்வர் ரேகா குப்தாவுக்கு பதவி ஏற்பு செய்து வைக்கிறார். இவருடன் புதிய அமைச்சர்களும் இதே மேடையில் பதவி ஏற்க உள்ளனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், திரை நட்சத்திரங்களுடன் முக்கியத் துறவிகளும் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லியின் 70 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக 48, ஆம் ஆத்மி 22 இடங்களை பெற்றிருந்தன.
யார் இந்த ரேகா குப்தா? – டெல்லியின் அடுத்த முதல்வராக டெல்லி பாஜக-வின் பல்வேறு முக்கிய தலைவர்களின் பெயர்கள் சொல்லப்பட்டன. இந்த நிலையில் ரேகா குப்தா முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். 50 வயதான ரேகா குப்தா, அண்மையில் நடைபெற்ற டெல்லி தேர்தலில் ஷாலிமார் பாக் சட்டமன்ற தொகுதியில் 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மூன்று முறை கவுன்சிலராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தெற்கு டெல்லி நகராட்சியின் மேயராகவும் பணியாற்றி உள்ளார். மாணவ பருவத்தில் அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்தவர்.