மதுரை: திருப்பரங்குன்றம் பகுதியில் துண்டு பிரசுரம் விநியோகித்த 30 பேர் மீது 8 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பரங்குன்றம் பகுதியில் மத நல்லிணக்கம், ஒற்றுமையை வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை இணைத்து நோட்டீஸ் வழங்க திட்டமிட்டன. இதற்கு முன் அனுமதி கேட்டு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க நிர்வாகி தியாகராஜன் என்பவர் பிப்.14-ம் தேதி திருப்பரங்குன்றம் காவல் துறையை அணுகினார். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
இந்நிலையில், நேற்று காலை இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் உள்ளிட்ட 4 சங்கங்களை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் கோயில் அருகே திரண்டனர். அவர்கள் மத நல்லிணக்க ஒற்றுமைக்கான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்தனர். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற திருப்பரங்குன்றம் போலீஸார் துண்டு பிரசுரங்களை வழங்கியவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனிடையே பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, மத பிரச்சினையை தூண்டும் வகையில் செயல்பட்டது உட்பட 8 பிரிவுகளில் தியாகராஜன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் மீது திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.