ஒற்றைத் தலைமைக்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவுக்கு தோல்வி: ஓபிஎஸ் சாடல்

ஒற்றைத் தலைமைக்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியைத் தழுவியுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்வது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கோட்டையன் தனது மனச்சுமையை வெளிப்படுத்தி உள்ளார். அவர் சிறந்த கட்சி விசுவாசி. விருப்பு, வெறுப்பின்றிப் பணியாற்றுபவர்.

அதிமுகவில் பழனிசாமி ஒற்றைத் தலைமையாக மாறிய பிறகு வந்த அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுக தோல்வியைத் தழுவியது. இதனால் தொண்டர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். அனைவரும் இணைந்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவருமே இருமொழிக் கொள்கையை ஏற்றவர்கள். எனவே, யாரும் புதிதாக பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம். அதிமுகவில் ஜெயக்குமார் நகைச்சுவை அரசியல்வாதி. இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

முன்னதாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: என்னைப் பற்றிய முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் விமர்சனத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. நானும், செங்கோட்டையனும் நீண்டகாலம் இணைந்து கட்சிப் பணியாற்றியுள்ளோம். எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க கூடியவர் அவர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்குகளைப் பெறத் தவறிவிட்டனர். ஏழு தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டது. 13 தொகுதிகளில் 3-வது இடத்துக்கு சென்றது. குறிப்பாக, கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக 5,000 வாக்குகள் மட்டுமே பெற்றது.

ராமநாதபுரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க பல்வேறு முயற்சிகள் நடந்தும், அதை மீறி 3 லட்சத்து 42 ஆயிரம் வாக்குகளைப் பெற்றேன். அதிமுக இணைய வேண்டும் என்ற கருத்துடன் உள்ளவர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். எப்போதும் இருமொழிக் கொள்கைதான் எங்களது நோக்கமாகும். இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.