புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவருக்கு முன் நான்கு வருடங்கள் அப்பொறுப்பில் இருந்த ராஜீவ் குமார் 24-க்கும் மேற்பட்ட தேர்தல்களை நடத்தியுள்ளார். இதில், குடியரசுத் தலைவர் மற்றும் பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் அடங்கும். அவரது பதவிக் காலம் பிப்ரவரி 18-ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையாராக ஞானேஷ் குமாரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
இவர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாவார். முன்னதாக தற்போதைய உள்துறை அமைச்சரான அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகத்திலும் ஞானேஷ் குமார் பணியாற்றியுள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கான மசோதாவை உருவாக்கியதில் இவரின் பங்கு மிக முக்கியமானதாக கூறப்படுகிறது.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதல் முறையாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேசத்தை கட்டமைப்பதற்கான முதல் படி வாக்கு செலுத்துவது. அதனால், 18 வயது பூர்த்தியான ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்காளர்களாக மாற வேண்டும். எப்போதும் வாக்களிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது., எப்போது இருக்கும்” என்றார்.
ஞானேஷ் குமார் நியமனம் குறித்து மத்திய அரசு நேற்றுமுன்தினம் திடீரென அறிவிக்கை வெளியிட்டது. இது தற்போது சர்ச்சையாகியுள்ளது. அவரின் நியமனத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.