புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கான பாஜக வேட்பாளராக அக்கட்சியின் ரோகிணி தொகுதி எம்எல்ஏ விஜேந்தர் குப்தா பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக கட்சித் தலைவர்கள் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தனர்.
கட்சியால் சபாநாயகர் பதவிக்கு தான் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்த விஜேந்தர் குப்தா, “முந்தைய பாஜக அரசு சபையில் தாக்கல் செய்யாமல் வைத்திருக்கு சிஏஜி அறிக்கையை முழுமையாக பெறுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாக ரோகிணி தொகுதியில் இருந்து பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜேந்தர் பிற பாஜக எம்எல்ஏக்களுடன் இணைந்து , ஆம் ஆத்மி அரசு, அதன் செயல்பாட்டு திறன்குறித்த 14 தலைமைக் கணக்கு தணிக்கையாளர்கள் (சிஏஜி) அறிக்கையை தாக்கல் செய்யாமல் தடுப்பதாக கூறி நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
புதிதாக அமைக்கப்பட்ட 8-வது டெல்லி சட்டபேரவையில் பாஜகவுக்கு 48 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சிக்கு 22 எம்எல்ஏகள் உள்ளனர். சபாநாயகர் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
முன்னதாக டெல்லியில் பாஜக 27 ஆண்டுகளுக்குப் பின்னர் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெற்று 48 எம்எல்ஏ.க்களுடன் ஆட்சியை அமைக்கிறது. டெல்லியின் முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லியின் 4-வது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னாள் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸின் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மியின் அதிஷி சிங் ஆகியோர் டெல்லியின் பெண் முதல்வர்களாக இருந்துள்ளனர்.
50 வயதாகும் ரேகா குப்தா முதன்முறை எம்எல்ஏ ஆவார். டெல்லி ஷாலிமார் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.