கராச்சி,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
கராச்சியில் நேற்று அரங்கேறிய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாம் லாதம் 118 ரன்களும், வில் யங் 107 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் கடின இலக்கை நோக்கி களம் கண்ட பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றியோடு தொடங்கியது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குஷ்தில் ஷா 69 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்கே, மிட்செல் சான்ட்னெர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். லாதம் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் கூறுகையில், “அவர்கள் ஒரு நல்ல இலக்கை எட்டினர். நாங்கள் அதை எதிர்பார்க்கவில்லை. நாங்களும் அந்த இலக்கை அடைய 260 ரன்கள் வரை நெருங்கினோம். நாங்களும் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தினோம், ஆனால் அவர்கள் நன்றாக விளையாடினர். பிட்ச் நிலைமைகளைப் பார்க்கிறோம். அது முன்பு போல் பேட்டிங் செய்ய எளிதாக இல்லை. ஆனால் வில் யங் மற்றும் லாதம் இணைந்து பேட்டிங் செய்து போட்டியை மாற்றி விட்டார்கள்.
இறுதியில், லாகூரில் நாங்கள் செய்த அதே தவறை மீண்டும் செய்தோம். பேட்டிங்கில் எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. பக்கர் ஜமானுக்கு ஏற்பட்ட காயம் குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அவர் கொஞ்சம் வலியில் இருக்கிறார். நாங்கள் இரண்டு இடங்களில் ஆட்டத்தை இழந்தோம். ஒரு முறை டெத் ஓவர்களில் பந்துவீசும் போது, பின்னர் பவர்பிளேயில் பேட்டிங் செய்யும் போது. இது எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் இதை ஒரு சாதாரண போட்டியைப் போல விளையாடி விட்டோம். இப்போது போட்டி முடிந்துவிட்டது, மீதமுள்ளவற்றில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்” என கூறினார்.