கவுகாத்தி,
அசாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் கடந்த மாதம் 6ம் தேதி மழையால் வெள்ள நீர் புகுந்தது. அப்போது சுரங்கத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்களில் சிலர் தப்பி வெளியே வந்த நிலையில் 9 பேர் அதில் சிக்கிக்கொண்டனர்.
தப்பி வெளியே வந்தவர்கள் சுரங்க உரிமையாளர் மற்றும் உள்ளூர் போலீசாரிடம் சுரங்க விபத்து பற்றி கூறியுள்ளனர். இதனையடுத்து, தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனை உறுதி செய்துள்ள அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, மீட்பு பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் பொறுப்பு படை அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர் எனவும் ராணுவ உதவியும் கோரப்பட்டு உள்ளது எனவும் முன்னதாகக் கூறியிருந்தார்.
இதற்கிடையே, கடந்த மாதம் 8ம் தேதி சுரங்கத்தில் இருந்து தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. அதேபோல கடந்த மாதம் 11ம் தேதி மேலும் 3 தொழிலாளிகளின் உடல் கண்டுபிடிக்கப்பட்டன. மீட்கப்பட்ட நான்கு சுரங்கத் தொழிலாளர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், உள்ளே சிக்கியவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சமும் கருணைத் தொகையாக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 44 நாட்களுக்கு பிறகு மீதமுள்ளவர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை சிலரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன என அவர் தெரிவித்தார்.
முன்னதாக, சுரங்கத்திற்குள் சிக்கிய அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.