புதுடெல்லி,
தனியாா் நிறுவனத்தின் மீதான வழக்கில் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படும்படி மற்றொரு ஐகோர்ட்டு நீதிபதியையும் அந்த மாநிலத்தில் உள்ள மாவட்டத்தின் கூடுதல் நீதிபதியையும் ஐகோர்ட்டு நீதிபதி ஒருவர் அறிவுறுத்தியதாக இரண்டு புகார்கள் லோக்பால் அமைப்பிடம் அளிக்கப்பட்டு இருந்தன.
தான், வழக்கறிஞராக பணியாற்றியபோது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வழக்குகளை குற்றஞ்சாட்டப்பட்ட ஐகோர்ட்டு நீதிபதி கையாண்ட நிலையில், மற்றொரு ஐகோர்ட்டு நீதிபதியையும் மாவட்டகூடுதல் நீதிபதியையும் அவர் அணுகியதாக மனுதாரர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.இந்த புகாா்களை விசாரித்து லோக்பால் அமைப்பு, பொதுமக்களின் ஊழியர் என்ற வரையறைக்குள் நீதிபதியும் இருப்பதாகவும், அவருக்கு லோக்பால் சட்டத்தில் விலக்கில்லை என்றும் கூறியது. இருப்பினும், ‘இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் வழிகாட்டலை பெற வேண்டியுள்ளதால் அடுத்த நான்கு வாரத்துக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும் கூறியது.
இந்த நிலையில், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, லோக்பால் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூா்ய காந்த், அபய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும், நீதித்துறையின் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு இது என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை மார்ச் 21-க்கு ஒத்திவைத்தனர்