சுனிதா வில்லியம்ஸ் விவகாரத்தில் அரசியல் – எலான் மஸ்க்

வாஷிங்டன்,

அமெரிக்காவில் தனியார் ஊடக நிறுவன நேர்காணலில் அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் எலான் மஸ்க் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் காரணங்களால் அமெரிக்காவின் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி உள்ளனர். முந்தைய ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அவர்களை பூமிக்கு அழைத்து வரும் பணியை ஸ்பேஸ் எக்ஸ் துரிதமாக மேற்கொண்டது. இருந்தாலும் அது பல்வேறு காரணங்களால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை விரைவாக அழைத்து வர பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம். இருவரையும் விண்வெளியில் இருந்து வெற்றிகரமாக அழைத்து வருவோம். இதற்கு முன்பு எங்களது நிறுவனம் விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளி வீரர்களை பூமிக்கு பத்திரமாக அழைத்து வந்துள்ளது என்றார்.

கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை ஜூன் 6-ம் தேதி அடைந்தனர். அப்போது முதல் அவர்கள் இருவரும் அங்கேயே உள்ளனர். அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்தது.

விண்வெளி மையத்தில் சுமார் ஆறு மாத காலத்துக்கும் மேலாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், மார்ச் 12-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் (க்ரூ-10) பூமியில் இருந்து புறப்படுகிறது. அந்த விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்துடன் டாக் (இணைப்பு) ஆனதும், அதே விண்கலனில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புகின்றனர். அவர்கள் மார்ச் 19-ம் தேதி அங்கிருந்து பூமிக்கு புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.