சிவகங்கை: இளையான்குடியில் உயிரிழந்த இரு சிறுமிகளின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்தனர். அரசு வேலைக்கு அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆழிமதுரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்தவர் சோபியா (8), அங்கன்வாடி மையத்தில் படித்தவர் கிறிஸ்மிதா (4). நேற்று முன்தினம் பள்ளி, அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற இருவரும் ஆசிரியர், அங்கன்வாடி ஊழியர் அஜாக்கிரதையால் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து, உடனடியாக பள்ளி தலைமையாசிரியர் தாய்மேரியை பணி நீக்கம் செய்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதி லெட்சுமி உத்தரவிட்டார்.
இன்று அங்கன்வாடி ஊழியர் தினேஷ் அம்மாளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். மேலும், 2 குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று குழந்தைகளின் உடல்கள் இளையான்குடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன.
ஆனால், குழந்தைகளின் குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி, கோட்டாட்சியர் விஜயகுமார், வட்டாட்சியர் முருகன், தமிழரசி எம்எல்ஏ மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அரசு வேலை வழங்குவதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும், தமிழரசி எம்எல்ஏ சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்குவதாகக் கூறினார். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு, உடல்களை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். முன்னதாக, அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன், பாஜக முத்த தலைவர் ஹெச்.ராஜா, மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, செயலாளர் சங்கர சுப்பிரமணியன், தவெக மாவட்டச் செயலாளர் முத்து பாரதி உள்ளிட்டோர் குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.