டெஸ்லா கார் உற்பத்தி ஆலையை இந்தியாவில் தொடங்குவது அமெரிக்காவுக்கு அநீதி: டிரம்ப்

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்க ஆர்வமாக உள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், அதிக இறக்குமதி வரி உள்ளிட்ட காரணங்களால் டெஸ்லா தயக்கம் காட்டி வருகிறது.

40 ஆயிரம் டாலர்களுக்கு மேல் விலை கொண்ட அதிநவீன சொகுசு கார்களுக்கான அடிப்படை இறக்குமதி வரியை 110%-லிருந்து 70 சதவீதமாக இந்திய அரசு குறைத்துள்ளது. இந்த சூழலில், கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடியை, டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் சந்தித்துப் பேசினார்.

இந்த பின்னணியில், இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுப்பது தொடர்பான விளம்பரத்தை லிங்க்டு இன் பக்கத்தில் டெஸ்லா கடந்த திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் 13 பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடங்கியிருப்பதன் மூலம் டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்க இருப்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுஇறது.

இதற்கிடையே, டெஸ்லா நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை இந்தியாவில் தொடங்குவது நியாயமாக இருக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில் “உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் நம்மை வைத்து பலன் அடைந்து கொள்கிறார்கள். வரியை விதித்துக் கொள்கிறார்கள். நடைமுறையில் கார்களை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவை சொல்லலாம். இந்தியாவில் எலான் மஸ்க் ஆலையை தொடங்கினால் ஒகே தான். ஆனால், அமெரிக்காவிற்கு அநீதியாக இருக்கும்” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.