புதுடெல்லி: டெல்லியில் பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள் 7 பேரில் முதல்வர் உட்பட 5 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தேர்தல் உரிமைகள் குறித்த அமைப்பான ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த 2025 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த சுயவிவர பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ள தகவல்களின்படி இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் ஆய்வின்படி, டெல்லியில் இன்று பதவியேற்ற 7 அமைச்சர்களில் முதல்வர் உட்பட ஐந்து பேர் (71%) தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அமைச்சர்களில் ஒருவரான ஆஷிஷ் சூட் தீவிரமான குற்ற வழக்குகளை எதிர்கொள்கிறார்.
சொத்துகளின் அடிப்படையில், அமைச்சர்களில் இரண்டு பேர் (29%) கோடீஸ்வர்கள். அமைச்சர்களில் அதிகம் சொத்துகளைக் கொண்டவராக ராஜவுரி கார்டன் தொகுதி எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்சா உள்ளார். அவர் தன்னிடம் ரூ.248.85 கோடி மதிப்புக்கு சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மிகவும் குறைவான சொத்து உடையவராக கரவால் நகர் தொகுதி எம்எல்ஏவான கபில் மிஸ்ரா உள்ளார். அவர் தன்னிடம் ரூ.1.06 கோடிக்கு மட்டுமே சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏடிஆர் அமைப்பின் ஆய்வின்படி, ஏழு அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.56.03 கோடி. அதேபோல் அமைச்சர்கள் தங்களுக்கு இருக்கும் கடன்களைப் பற்றியும் தெரிவித்துள்ளனர். இதில் அரவிந்த் கேஜ்ரிவாலை தோற்கடித்த புதுடெல்லி தொகுதி எம்எல்ஏவான பர்வேஷ் சாஹிப் வர்மா தனக்கு ரூ.74.36 கோடிக்கு கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கல்வித் தகுதியைப் பொறுத்தவரை ஏழு அமைச்சர்களில் ஆறு பேர் பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதி உள்ளவர்கள் என்று தெரிவித்துள்ளனர். அமைச்சர்களில் ஒருவர் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களின் வயதுகளைப் பொறுத்தவரை ஐந்து அமைச்சர்கள் (71 சதவீதம்) 41 முதல் 50 வரை உள்ளனர். மீதமுள்ள இரண்டு பேர் (29 சதவீதம்) 51 முதல் 60 வயது வரை உள்ளனர். பதவியேற்றுக் கொண்ட 7 அமைச்சர்களில் முதல்வர் ஒருவர் மட்டுமே பெண்.
முன்னதாக, டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வருடன், பாஜக எம்எல்ஏக்களான பர்வேஷ் வர்மா, மஞ்சிந்தர் சிங் சிர்சா, கபில் மிஸ்ரா, ஆஷிஷ் சூட், பங்கஜ் குமார் சிங் மற்றும் ரவிந்தர் இந்த்ராஜ் சிங் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.