திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 40,490 பேருக்கு கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் கிடைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 1,127 மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பணி மாறுதல் ஆணையை வழங்கி பேசியதாவது:
சுகாதாரத்துறை சார்பில் பணி நியமனங்கள், பணி மாறுதல்கள், பதவி உயர்வு ஆகியவை வெளிப்படைத்தன்மையுடன் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்ஆர்பி) மூலம் 1,021 மருத்துவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அதிக காலி பணியிடங்கள் இருக்கிற 20 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து, அங்கு கலந்தாய்வு நடத்தி அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
அந்த வகையில், இந்தியாவில் முதல் முறையாக தேர்வு செய்யப்படும் மருத்துவர்களுக்கு கலந்தாய்வு என்பது தமிழகத்தில் மட்டுமே சாத்தியமாகி உள்ளது. இந்நிலையில், 1,021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டபோது, ஓராண்டு காலத்துக்கு பணி மாறுதல் கேட்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதனால், 1,021 மருத்துவர்களும் மிகச் சிறப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றினர்.
தற்போது, ஓராண்டு நிறைவு பெற்றிருப்பதாலும், புதிய மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டிருப்பதாலும், கடந்த 3 நாட்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டு 1,127 மருத்துவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி ஆணைகள் தரப்பட்டுள்ளன. 1,127 மருத்துவர்களில் 893 பேருக்கு அவர்கள் விரும்பிய இடங்களில் பணி கிடைத்திருக்கிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வெளிப்படை தன்மையுடன் நடத்தப்பட்ட கலந்தாய்வுகளின் மூலம் 40,490 பேருக்கு 4 ஆண்டுகளில் பணி மாறுதல் கிடைத்துள்ளது. அதேபோல், மருத்துவ துறையில் எம்ஆர்பி, டிஎன்பிஎஸ்சி, என்ஹெச்எம், மாவட்ட சுகாதார நலவாழ்வு குழுமம் மூலம் என 23,598 பேருக்கு சுகாதாரத்துறையில் புதிதாக பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 4,615 மருத்துவர் அல்லாத காலி பணியிடங்கள் விரைவில் எம்ஆர்பி மூலம் நிரப்பப்படும்.
மேலும், கடந்த ஜனவரி மாதம் 2,553 மருத்துவர் இடங்களுக்கு எம்ஆர்பி மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 24,000 பேர் கலந்து கொண்ட நிலையில், 4,585 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் தேர்வாகும் மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, வரும் 26-ம் தேதி முதல்வர் தலைமையில் பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.