புதுடெல்லி: கடந்த 1974 ஜூலை 19-ம் தேதி ஹரியானாவின் ஜுலானா பகுதியில் ரேகா குப்தா பிறந்தார். அவரது தந்தை ஜெய் பகவான் ஜிண்டால், பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணியாற்றினார். தந்தையின் பணி காரணமாக, குடும்பம் டெல்லிக்கு இடம்பெயர்ந்தது. டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் ரேகா குப்தா இணைந்தார். டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக பணியாற்றினார். பி.காம் முடித்த பிறகு, காஜியாபாத் ஐஎம்ஐஆர்சி கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.
கல்லூரி காலம் முதலே அரசியலில் தீவிர ஆர்வம் காட்டிய ரேகா குப்தா, டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு 3 முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லி பாஜகவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார். ரேகா குப்தா, இத்தேர்தலில் டெல்லி ஷாலிமார் பாக் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தேர்தலில் டெல்லி பெண்கள் பெருவாரியாக பாஜகவுக்கு வாக்களித்ததால் 27 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. எனவே, பெண்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பெண் முதல்வர் பதவியேற்றுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் 21 மாநிலங்களில் பாஜக மற்றும் அந்த கட்சி தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த சூழலில், பாஜகவின் ஒரே பெண் முதல்வர் என்ற பெருமையை ரேகா குப்தா பெற்றுள்ளார். நாட்டில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
இதில், மேற்கு வங்கத்தில் மட்டுமே பெண் முதல்வர் (மம்தா பானர்ஜி) ஆட்சி நடத்துகிறார். அவருக்கு அடுத்து நாட்டின் 2-வது பெண் முதல்வர் என்ற பெருமையை ரேகா பெற்றுள்ளார்.
துணை முதல்வர் பர்வேஷ் சர்மா: முதல்வர் ரேகா குப்தா, உள்துறை, நிதி, சேவை, ஊழல் தடுப்பு துறைகளை தன்வசம் வைத்துள்ளார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் சாகிப் சிங் வர்மாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவரிடம் கல்வி, பொதுப்பணி, போக்கு வரத்து துறைகள் வழங்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சாவிடம் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, தொழில் துறை, அமைச்சர் ரவீந்தர் இந்த்ராஜ் சிங்கிடம் சமூக நலம், எஸ்சி, எஸ்டி நலன், தொழிலாளர் நலத் துறை, அமைச்சர் கபில் மிஸ்ராவிடம் நீர்வளம், சுற்றுலா, கலாச்சாரம், அமைச்சர் பங்கஜ் குமார் சிங்கிடம் சட்டம், வீட்டு வசதித் துறை, அமைச்சர் ஆசிஷ் சூட்டிடம் வருவாய், சுற்றுச்சூழல், உணவு, பொது விநியோகத் துறை வழங்கப்பட்டு உள்ளது.