Thaman: “பெண்கள் சுதந்திரமாக இருப்பதால் திருமணம் கடினமாகிவிட்டது'' – தமன் பேசியது என்ன?

இசையமைப்பாளர் தமன் திருமணம் குறித்த தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். 41 வயது நபரான தமன், சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பெண்கள் தற்போது சுதந்திரமாக இருக்க போராடுவதனால் ஆண்கள் திருமணம் செய்துகொள்ள கூடாது எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “பெண்கள் சமூகத்தை” நாம் இழந்து வருவதாகவும் எப்படி பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன என்றும், இன்றைய சமூகத்தில் ஓர் உறவைப் பாதுகாப்பது கடினமானதாக மாறிவிட்டதாகவும் பேசியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இவரது கருத்து விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

தமன்

Thaman பேசியது என்ன?

யூடியூபர் நிஹில் விஜயேந்திர சிம்ஹாவுடனான உரையாடலில் தமனிடம், திருமணம் செய்துகொள்வதற்கு சரியான வயது எது எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு சமூக விதிமுறைகள் மற்றும் பெண்களின் சுதந்திரமும் மாறிவிட்டதனால் இன்றைய சூழலில் திருமணம் செய்துகொள்வது குறித்து மறு ஆலோசனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அவர், “இப்போது யாரும் திருமணம் செய்துகொள்வதை நான் விரும்பவில்லை. பெண்களும் வாழ்க்கையில் சுதந்திரமாக இருக்க விரும்புவதனால் இது கடினமாக மாறிவிட்டது. அவர்கள் யாருக்கும் கீழும் இருக்க விரும்பவில்லை. நான் என்ன நினைக்கிறேன் என்றால்… நாம் முந்தைய பெண்கள் சமூகத்தை இழந்துவிட்டோம்.” என்றார்.

Thaman

பெண்கள் சுய நிறைவுடன் இருக்க விரும்புவதாலும், யாரையும் சார்ந்து வாழ விரும்பவில்லை என்பதாலும் கலாச்சார விழுமியங்கள் மாறிவிட்டதாக அவர் பேசியிருக்கிறார்.

மேலும் அவர் சமூக வலைத்தளங்கள் மக்கள் உறவுகளைப் பார்க்கும் விதத்தை மாற்றிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமன் கூறுவதன்படி, சமூக வலைத்தளங்கள் யதார்த்தமில்லாத பெர்ஃபெக்‌ஷன்களை நிர்ணயம் செய்கின்றன. இது தனிமனிதர்கள் வெற்றிகரமான திருமணத்தை உருவாக்கத் தேவையானவற்றை கவனிக்காமல் விட வழிவகுக்கிறது.

“நான் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேனா எனத் தெரியவில்லை. நாம் அழகான விஷயங்களை மட்டுமே பகிர்கிறோம். அதன் பின்னிருக்கும் சிரமத்தை மறைக்கிறோம். நான் இப்போது திருமணத்தை ஆதரிப்பதில்லை ஏனென்றால் இன்றைய தரநிலைகளைப் புரிந்துகொள்வது கடினமானதாக உள்ளது. மக்கள் விவாகரத்து பெறுவது சாதாரணமாகிவிட்டது. யாரும் சகித்துக்கொள்ள விரும்புவதில்லை” எனக் கூறினார் அவர்.

தமனின் கருத்துகளுக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.