சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 26-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் 26-ம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ், 23, 24-ம் தேதிகளில் ஒருசில இடங்களில் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
ஓரிரு இடங்களில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.