ஒட்டாவா,
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் கனடாவின் டொரண்டோவிற்கு புறப்பட்டது. சி.ஆர்.ஜே-900 என்ற அந்த விமானத்தில் 4 பணியாளர்கள் உள்பட 80 பயணிகள் பயணித்தனர். விமானம் டொரன்டோ விமான நிலையத்தில் தரையிறங்கிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் அப்படியே தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில், விமானத்திற்குள் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில், 20 பயணிகள் காயம் அடைந்தனர். இதில் 3 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லேசான காயம் அடைந்த பயணிகளை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர்.
இந்தநிலையில் விபத்து நடைபெற்றபோது சி.ஆர்.ஜே-900 எல்.ஆர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவருக்கும் தலா ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்குவதாக டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஓடுபாதையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கனடாவில் பல்வேறு பகுதிகளில் தற்போது கடும் பனிப்புயல் வீசி வருகிறது. அந்த வகையில் டொரண்டோவிலும் பனிப்புயல் வீசியதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.