USAID அமைப்போடு நீண்ட கால தொடர்பு; பொய் சொல்கிறதா பாஜக? – Fact Checkers சொல்வதென்ன?

அமெரிக்காவின் USAID அமைப்பு 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவின் தேர்தல் விழிப்புணர்வு பணிகளுக்கு ஒதுக்கியதன் மூலம், இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தலையிடும் விதமாக செயல்பட்டதாக ட்ரம்ப் அரசும் மோடி ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.கவும் பிரதமர் மோடியும் மற்றும் இன்னபிற பா.ஜ.கக்காரர்களுமே அமெரிக்காவின் USAID அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக Fact Checker கள் சில ஆதாரங்களை எடுத்து வைத்திருக்கின்றனர்.

Modi Trump

1960 களில் ஜான்.எஃப். கென்னடி அதிபராக இருந்த சமயத்தில் United States Agency for International Development (USAID) என ஒரு சுயாதீன அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பு உலகளவில் பல நாடுகளிலும் கிளை அமைத்து பசி, பஞ்சம், மருத்துவ அவசர நிலை போன்ற சமயங்களில் அந்த நாடுகளுக்கு உதவிக்கொண்டிருந்தது. இதற்காக வருடா வருடம் குறிப்பிட்டளவு பட்ஜெட்டையும் அமெரிக்க அரசு ஒதுக்கி வருகிறது.

டெனால்ட் ட்ரம்ப் அதிபரான பிறகு இந்த USAID அமைப்புக்கு எதிராக பேசி வந்தார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கோட்பாட்டை முன்வைக்கும் ட்ரம்ப், அமெரிக்கர்களின் வரிப்பணத்தில் மற்ற உலக நாடுகளுக்கு உதவி செய்வதா என கொந்தளித்தார். ட்ரம்ப் அதிபரானவுடன் எலான் மஸ்க் தலைமையில் Department of Government Efficiency – ‘DOGE’ என்ற அமைப்பை உருவாக்கினார். பல்வேறு துறைசார்ந்த யோசனைகளை அரசுக்கு வழங்கும் விதத்தில் அதிபரின் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி அந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

எலான் மஸ்க்கும் USAID அமைப்பை ஒரு கிரிமினல் நடவடிக்கை என விமர்சித்தார். மேலும், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் USAID அமைப்பு மூலம் பல நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வந்த நிதியையும் விலக்கிக் கொண்டனர். அந்த வகையில்தான் இந்தியாவில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை ரத்து செய்வதாக DOGE அறிவித்தது. மேலும், டொனால்ட் ட்ரம்பும் `இந்தியாவுக்கு எதற்கு 21 மில்லியன் டாலர்? அதன் மூலம் இந்தியாவின் தேர்தல் முடிவுகளை மாற்ற USAID முயன்றதா?’ என்பதைப் போன்றும் பேசியிருக்கிறார்.

இதையெல்லாம் வைத்துக் கொண்டுதான் பா.ஜ.க வின் சார்பில் காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். 2012 இல் USAID சார்ந்த அமைப்போடு இந்திய தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் செய்ததாகவும் பா.ஜ.க சார்பில் அமித் மால்வியா போன்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில்தான், Alt News ஜூபேர் மற்றும் ஓஜா என்ற Fact Checkers இருவர் பா.ஜ.கவுக்கும் USAID அமைப்புக்கும் நீண்ட நாட்களாக இருக்கும் தொடர்பை காட்டும் வகையில் சில ஆதாரங்களை வெளியிட்டிருக்கின்றனர்.

அதன்படி, ஜூபைர் ஒரு ஆல் இந்தியா ரேடியோவின் 2022 ட்வீட் ஒன்றை எடுத்து காண்பித்திருக்கிறார். அதில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த சம்ரித் என்ற திட்டத்தை நிதி ஆயோக் மற்றும் USAID அமைப்பு இணைந்து செய்யவிருப்பதாக AIR அறிவித்திருக்கிறது.

அதேமாதிரி, 2022 இல் மகாராஷ்ட்ரா முதல்வராக இருந்த போது தேவேந்திர பட்னாவிஸூம் விவசாயம், கழிவு மேலாண்மை சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக USAID அமைப்புடன் இணைந்து செயல்பட போவதாக ட்வீட் செய்திருக்கிறார்.

Smriti

அதேமாதிரி, ஸ்மிருதி இராணி அவர் USAID அமைப்பின் தூதுவராக செயல்பட்டது குறித்து 2011 இல் ஒரு ட்வீட் செய்திருக்கிறார். அதையும் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.

இன்னொரு Fact Checker ஆன ஆதித்யா ஓஜா மோடி 2021 இல் காசநோய் இல்லாத இந்தியாவை படைப்போம் என ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு கொடுக்கப்பட்ட பத்திரிகை செய்தியில் USAID யின் பிரதிநிதிகளும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. 2014 இல் ஒபாமா அதிபராக இருந்த போது மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போதும் USAID அமைப்பின் தலைவர் அந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டிருக்கிறார். 2023 இல் இந்திய இரயில்வே ஜீரோ கார்பன் வெளியேற்ற இலக்கை எட்டவும் USAID அமைப்புடன் இந்திய அரசு ஒரு ஒப்பந்தத்தை செய்திருக்கிறது. அதேமாதிரி, வெள்ளை மாளிகையில் பத்திரிகை செயலாளராக இருந்த உமா சங்கர் என்பவர் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி, கொரோனா சமயத்தில் மட்டும் USAID அமைப்பு இந்தியாவுக்கு 100 மில்லியன் டாலர் அளவுக்கு உதவி செய்திருக்கிறது என கூறியிருக்கிறார்.

USAID அமைப்புடன் இத்தனை நெருக்கமாக இருந்துகொண்டு காங்கிரஸை பா.ஜ.க அரசியலுக்காக விமர்சிப்பதாக சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர்.

Modi – Trump

இந்நிலையில், அந்த 21 மில்லியன் டாலர் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டதில்லை எனவும் வங்கதேசத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி இந்தியாவுக்கென தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.