“கடவுளால்கூட பெங்களூருவை மாற்ற முடியாது” – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சால் சர்ச்சை

பெங்களூரு: “பெங்களூருவில் அதிகரித்து வரும் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினைகளை கடவுளே நினைத்தால்கூட ஒரே இரவில் தீர்க்க முடியாது” என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தக் கருத்தை சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பெங்களூருவில் நீண்டகாலமாக இருந்து வரும் போக்குவரத்து பிரச்சினைகள் குறித்தும், திட்டங்கள் தாமதாமாவது குறித்தும் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், இது குறித்து கடந்த புதன்கிழமை பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “பெங்களூருவை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மாற்ற முடியாது. கடவுளால் கூட அதைச் செய்ய முடியாது. சரியான திட்டமிடல் மூலம் செயல்கள் நடைபெற்றால் மட்டுமே பிரச்சினைகளை சரி செய்ய முடியும்,” என்று கூறி இருந்தார்.

அவரது இந்தக் கருத்து, சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பொருளாதார நிபுணரும், ஆரின் கேபிடல் நிறுவனத்தின் தலைவருமான மோகன்தாஸ் பாய், “டி.கேசிவகுமார், நீங்கள் எங்கள் அமைச்சராகி 2 ஆண்டுகள் ஆகின்றன! ஒரு வலிமையான அமைச்சராக உங்களை நாங்கள் பாராட்டி வரவேற்றோம்.

ஆனால், எங்கள் வாழ்க்கை மிகவும் மோசமாகிவிட்டது! பெரிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன! அரசாங்கம் எந்த திட்டத்தையும் சரியான நேரத்தில் முடிக்காததால் பிரச்சினைகள் அதிகமாகின்றன. நல்ல நடைபாதைகளுடன் கூடிய சுத்தமான பெங்களூருவை ஏன் விரைவாக உறுதி செய்ய முடியாது? பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த 5,000 புதிய மின்சார பேருந்துகளை ஏன் விரைவாக வாங்க முடியாது? தொடர்ச்சியான தாமதங்களை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக மெட்ரோவை முடிக்க 24×7 வேலை செய்ய அதிகாரிகளை நீங்கள் ஏன் வலியுறுத்தக்கூடாது?

தயவுசெய்து எங்கள் வாழ்க்கையை மேம்படுத்த கவனம் செலுத்துங்கள். நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அதிப்படியான மெட்ரோ கட்டண உயர்வால் சுமார் 1 லட்சம் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். மோசமான நிர்வாகத்துக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. நீங்கள் எங்கள் வலிமையான அமைச்சர் – தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்” என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியான பாஜகவும் சிவகுமாரின் கருத்தை விமர்சித்ததுடன், சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசை திறமையற்றது என்று குற்றம் சாட்டியுள்ளது. “உலகத் தரமிக்கதாக பெங்களூருவை உருவாக்குவேன் என்று சொன்ன ஒருவர், தற்போது கடவுளால் கூட இதைச் சரிசெய்ய முடியாது என்று கூறி இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அப்படியானால், வேறு யாரால் முடியும்? மக்களுக்கு சேவை செய்ய கடவுள் ஒரு கட்சிக்கு, ஒரு நபருக்கு வாய்ப்பளித்துள்ளார். இந்த அரசாங்கம் வளர்ச்சியைத் தவிர மற்ற எல்லா நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது” என பாஜக மாநிலத் தலைவர் மோகன் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.