துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் துபாயில் நேற்று நடந்த 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. ‘இம்பேக்ட் பீல்டர் விருது’ வழங்கி கவுரவித்து வருகிறது.
அதன்படி இந்த போட்டிக்கான சிறந்த பீல்டராக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை ஜடேஜா வழங்கி கவுரவித்தார்.