மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெறும் போப் பிரான்சிஸ் பதவி விலகுவாரா? – வாடிகன் விளக்கம்

வாடிகன்: போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், அவரின் உடல் நிலையில், தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், அவர் பதவி விலகுவாரா என்ற கேள்வியும் எழுத் தொடங்கியுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88 வயது), உடல் நலக்குறைவு காரணமாக 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது இதயம் நன்றாக செயல்படுவதாகவும் வாடிகன் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை வெளியான தகவலின்படி, ‘இரவு அவர் நன்றாக ஓய்வெடுத்தார். இன்று காலை போப் பிரான்சிஸ் எழுந்து காலை உணவை உட்கொண்டார்’ என கூறப்படுகிறது.

போப் பிரான்ஸிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், போப் பிரான்சிஸ் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி போப் பெனடிக்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் கடந்த 600 ஆண்டுகளில் முதல் முறையாக தனது போப் பதவியை ராஜினாமா செய்தவர் ஆவார். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த பிரான்சிஸ் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து வாடிகன் நிர்வாகம் சார்பில், கத்தோலிக்க திருச்சபையின் மதகுருவான கார்டினல் ரவாசி கூறுகையில், “போப் பிரான்சிஸ் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்று விரும்புவார். அதற்கு ஏதேனும் இடையூறு ஏற்படும் சூழ்நிலை வந்தால், அவர் ராஜினாமா செய்ய முடிவு செய்யலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார். அதேசமயம் போப் பிரான்சிஸ் பதவி விலகுவது குறித்து இதுவரை பரிசீலனை செய்யபடவில்லை. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வயதில் முதிர்ந்தவர் என்பதால், நிமோனியா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வர அவருக்கு மேலும் சில வாரங்கள் தேவைப்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, போப் பிரான்சிஸ், போப் பதவி என்பது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று நம்புவதாக கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

88 வயதான போப் சற்றே அதிக எடை கொண்டவர். உடல் ரீதியாக அவரால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. முழங்கால்கள் மோசமாக இருப்பதால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறார். முன்னதாக, தனது உடல் நிலை மோசமாக இருப்பதை அவரே ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.