Champion Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நேற்று முன்தினம் (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்கியது. நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியின் போது தான் பாகிஸ்தான் அணி மீது ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டது.
இந்தப் போட்டியில் முதலில் நியூசிலாந்து அணியே பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 320 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடியதால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் கடுமையாக திணறினர். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் அவ்வபோது ஆலோசனைகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஓவர்கள் வீசுவதில் தாமதம் ஏற்பட்டது.
அடிக்கு மேல் அடி
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீச முடியாததால் போட்டியின் நடுவர் பாகிஸ்தான் அணிக்கு 5 சதவீதம் அபராதம் விதித்தார். அதன்படி பாகிஸ்தான் வீரர்களின் அனைவரது சம்பளத்தில் இருந்தும் 5 சதவீதம் அபராதமாக பிடித்தம் செய்யப்படும்.
மேலும் படிங்க: கார் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய கங்குலி.. நடந்தது என்ன?
321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கிய நிலையில், அந்த அணி பேட்டிங்கிலும் சொதப்பி 260 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவுடன் வென்றால் மட்டுமே வாய்ப்பு
இதனால் பாகிஸ்தான் அணி குரூப் ஏ பிரிவின் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் காயம் அடைந்த ஃபகார் ஜமான் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகி உள்ள நிலையில், தற்போது பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அபராதம் விதித்திருப்பது கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த போட்டியாக பாகிஸ்தான் அணி இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் நாளை மறுநாள் (பிப்.23) துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் படிங்க: சஹால் – தனஸ்ரீ வர்மா விவாகரத்து உறுதி! நீதிமன்றம் உத்தரவு… மணமுறிவுக்கு என்ன காரணம்?