போராடும் விவசாயிகள் – மத்திய அரசு இடையே சனிக்கிழமை அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை

புதுடெல்லி: பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே சனிக்கிழமை (பிப்.22) சண்டிகரில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பூர்ண சந்திர கிஷன், விவசாயிகள் தலைவர்கள் ஜக்ஜித் சிங் டல்லேவால், சர்வான் சிங் பாந்தர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். பிப்.19 தேதியிட்ட அந்த கடிதத்தில், “பிப்ரவரி 14 அன்று சண்டிகரில் நடைபெற்ற எஸ்கேஎம் (SKM) மற்றும் கேஎம்எம் (KMM) விவசாய சங்கங்களின் தலைவர்களுடனான முந்தைய சந்திப்பின் தொடர்ச்சியாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

விவசாயிகள் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக இந்திய அரசு மற்றும் பஞ்சாப் அரசின் அமைச்சர்களுடன் பிப்.22 அன்று சண்டிகரில் உள்ள மகாத்மா காந்தி பொது நிர்வாக நிறுவனத்தில் நடைபெற உள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்.14 அன்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையிலான மத்திய குழு, விவசாய பிரதிநிதிகளுடன் சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்தியது. ஒரு நல்ல சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. அன்றைய கூட்டத்தில் பேசிய பிரகலாத் ஜோஷி, “விவசாயிகள் பிரதிநிதிகளுடன் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை சண்டிகரில் நடைபெறும். அதில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் மத்திய குழுவுக்கு தலைமை தாங்குவார். அந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்பேன்” என்று கூறியிருந்தார். அப்போது, விவசாயிகள் அடுத்த கூட்டத்தை டெல்லியில் நடத்த கோரிக்கை விடுத்தனர். எனினும், மத்திய அரசு அதை சண்டிகரில் நடத்த திட்டமிட்டுள்ளது.

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், மின்சாரக் கட்டண உயர்வு கூடாது, போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கேரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.