மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, தனியார் சொகுசு விடுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் இன்று (பிப்.21) ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள ஃபோர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம் மற்றும் ஆண்டு விழா கூட்டம் வரும் 26-ம் தேதி நடத்தப்பட்ட உள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, அக்கட்சியின் பொதுச் செயலர் என்.ஆனந்த் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் இன்று ஆய்வு செய்தார்.
தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பு குறித்தும் மற்றும் பாதுகாவலர்கள், தலைமை நிலைய பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வரும் பொதுக்குழு உறுப்பினர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான ஏற்பாடுகள், மற்றும் கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் கட்சித் தலைவர் வரும் பாதை மற்றும் திரும்பிச் செல்லும் பாதை தொடர்பாக ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அமர்வதற்கான இடவசதிகள் மற்றும் 2,500 நபர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வின்போது, 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.