தஞ்சாவூர் சீனிவாசன் பிள்ளை சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 80 கடைகள் உள்ளன. வணிக வளாக நிர்வாகத்தினர் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருந்துள்ளனர். மநகராட்சி நிர்வாகம் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தினர் பலமுறை கேட்டும் சொத்து வரி செலுத்தவில்லை. இதையடுத்து, கடந்த சில நாட்களாக மாநகராட்சி அலுவலர்கள் வணிக வளாக நிர்வாகத்திடம், 20 ஆண்டுகளாக செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.47 லட்சம் உள்ளது. அந்த பணத்தை செலுத்தாமல் உள்ளீர்கள். உடனே கட்டுங்கள் என்றனர். மேலும் அதற்கான நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

ஆனால் அதன் பிறகும் வரியை செலுத்தவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தினர், வணிக வளாகத்தின் ஒரு நுழைவு வாயிலில் யாரும் செல்ல முடியாத வகையில் குப்பை வண்டியை நிறுத்தினர். மற்றொரு வாயிலில் குப்பையை கொட்டினர். இதனால் வணிக வளாகத்துக்கு உள்ளே செல்ல முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர். குப்பையை பார்த்து அந்த சாலை வழியாக சென்ற பொதுமக்கள் முகம் சுளித்தனர். பின்னர் வணிக வளாகத்தினர் உடனடியாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தினர். இதைத் தொடர்ந்து வணிக வளாகம் முன்பு நிறுத்தப்பட்ட குப்பை வண்டியும், குப்பையும் அகற்றப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, “தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொத்து வரியை நீண்ட காலம் செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் சொத்து வரி செலுத்தாமல் இருப்பது தெரிகிறது. இந்த வரியை வசூலிக்க நிர்வாகம் உத்தரவை வழங்கியுள்ளதால், மாநகராட்சி ஊழியர்கள் வரி வசூலில் ஈடுபட்டுள்ளனர். சீனிவாசன் பிள்ளை சாலையில் உள்ள வணிக வளாகத்தினர் கடந்த 20 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தவில்லை.

கடந்த ஒரு மாதமாக மாநகராட்சி அலுவலர்கள் வரியை வசூலிக்க நடையாய் நடந்தாலும், அவர்களிடம் வரி வசூலிக்க முடியவில்லை. இதையடுத்து தான் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை கையாண்டது” என்று தெரிவித்தனர். இனி லட்சக்கணக்கில் வரி செலுத்தாமல் இருக்கும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைக்கு இதே பாணியில் வரி வசூலிக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள்.