ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், “ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யியை சந்திக்க ஒரு வாய்ப்பை வழங்கியது,” என்று தெரிவித்துள்ளார். மேலும், சந்திப்பு தொடர்பான படங்களையும் அதில் அவர் இணைத்துள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், “இரு அமைச்சர்களும் (இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்கள்) நவம்பர் மாதம் நடந்த கடைசி சந்திப்புக்குப் பிறகு இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்தனர். குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் அமைதியை நிர்வகித்தல், கைலாஷ் மானசரோவர் யாத்திரை, விமான இணைப்பு மற்றும் பயண வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது,” என்று தெரிவித்தார்.
2020-ஆம் ஆண்டு கல்வான் மோதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வதற்கான ஒரு முயற்சியாக இந்தச் சந்திப்பு கருதப்படுகிறது.
ஜி20 அமர்வில் ‘உலகளாவிய புவிசார் அரசியல் நிலைமை குறித்த விவாதம்’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை உரையாற்றிய ஜெய்சங்கர், “உலகளாவிய புவிசார் அரசியல் நிலைமை பல வகைகளிலும் கடினமாகவே உள்ளது. கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட சவால்கள், நாடுகளுக்கு இடையேயான மோதல் சூழ்நிலைகள், நிதி அழுத்தங்கள், உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றங்கள் ஆகியவை அவற்றில் சில.
எதிர்காலத்தில் பார்க்கும்போது, செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள், விண்வெளி, ட்ரோன்கள், கிரீன் ஹைட்ரஜன் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தெளிவான புவிசார் அரசியல் தாக்கங்களைக் கொண்டுள்ளது” என தெரிவித்தார்.
ஜி20 உறுப்பினர்கள்: அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, யுனைடெட் கிங்டம், அமெரிக்கா, ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்.