புதுடெல்லி: “பிரதமர் நரேந்திர மோடியை தேர்தலில் தோற்கடிக்க அமெரிக்கா 21 மில்லியன் டாலர் கொடுத்தது என்றால், இந்திய உளவுத் துறையும், ‘ரா’ பிரிவும் எங்கே போயின?” என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பவன் கெரா, “பிரதமர் மோடியை தோற்கடிக்க அமெரிக்கா 21 மில்லியன் டாலர் உதவியை வழங்கியதாக பொய்யான ஒரு கதை பரப்பப்படுகிறது. அப்படியானால், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஐ/பி, ரா போன்ற அமைப்புகள் எங்கே போயின? உங்கள் ஆட்சியில், இந்தியாவுக்குள் 21 மில்லியன் டாலர் வர முடிந்தால், அது பாஜகவின் முகத்தில் விழுந்த அறைதானே.
தற்போது அவர்கள் தங்கள் கூற்றை மாற்றி, 2012-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். அப்படியானால், அந்த பணத்தைக் கொண்டு அவர்கள் 2014 தேர்தலில் வெற்றி பெற்றார்களா? நாங்கள் கேள்விகள் கேட்கும் போதெல்லாம் அவர்கள் தங்களுக்கு சாதகமாக அனைத்தையும் மாற்றிக் கொள்கிறார்கள்.
பணம் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை அவர்கள் நிரூபிக்கட்டும். ஒரு பெரிய தொகை வங்கதேசத்துக்குச் சென்றது தொடர்பான புலனாய்வு பத்திரிகையின் ஓர் ஆவணத்தை நாங்கள் அவர்களுக்குக் காட்டியுள்ளோம். எனவே, இப்போது பிரதமர் தூங்கிக் கொண்டிருக்கிறாரா என்று கேட்க விரும்புகிறோம். ஏனெனில், அது இந்தியாவை நேரடியாகவும் மோசமாகவும் பாதிக்கிறது.
பிரதமர் இதை எப்படி அனுமதிக்க முடியும்? 1971-இல் இந்திரா காந்தி அமெரிக்காவின் எந்த தலையீட்டையும் அனுமதிக்கவில்லை என்பது எங்களுக்கு நினைவிருக்கிறது. எனவே, ஒரு கட்சியாக, அந்த வகையான அரசியல் பாரம்பரியத்துக்கு நாங்கள் பழகிவிட்டோம். இப்போது, மோடி என்ன செய்கிறார் என்று பாருங்கள்.
கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசுகளை சீர்குலைக்க வெளிநாட்டு நிதியை பயன்படுத்திய பாஜக, அத்தகைய பாவங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே அமெரிக்க நிதியுதவி விவகாரத்தை எழுப்புகிறது. ‘21 மில்லியன் டாலர் அமெரிக்க நிதியுதவிக் கதை’ முழுவதும் பாஜக, மோடி அரசின் அமைச்சர்கள், அதன் பொருளாதார ஆலோசகர், ஐடி பிரிவுத் தலைவர், ஆர்எஸ்எஸ் – பாஜக சூழல் அமைப்பு மற்றும் பாஜக நட்பு ஊடகங்களின் ஒரு பகுதியினர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட இந்தியாவில் காங்கிரஸ் அரசுகளை சீர்குலைக்க வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்திய அவர்களின் சொந்த பாவங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப திட்டமிடப்பட்டது” என தெரிவித்துள்ளார்.