பாட்னா: பிஹார் மாநிலம், ரோக்தஸ் மாவட்டத்தின் சசாராம் பகுதியில் தேர்வு அறையில் நடந்த பிரச்சினை தொடர்பாக இரண்டு மாணவர் குழுவுக்கு இடையே நடந்த மோதலில் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இரண்டு பேர் காயமடைந்தனர்.
தேர்வு அறையில் நடந்த மோசடித் தொடர்பாக மாணவர்களுக்கு இடையே புதன்கிழமை கைகலப்பு நடந்துள்ளது. இன்று அந்த மோதல் தீவிரமடைந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாணவர்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர். ஒருவருக்கு காலிலும், மற்றொருவருக்கு பின்பக்கமும் காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சையின்போது ஒரு மாணவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருடன் அவரது கிராமத்தினர் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்த முயன்றனர். என்றாலும், இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் சமாதானமடைந்து மாணவரின் உடலை இறுதிச் சடங்குக்காக எடுத்துச் சென்றனர்” என்று தெரிவித்தார். பிஹாரில் மாநில அரசு தேர்வு வாரியத்தின் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு பிப்.17-ம் தேதி தொடங்கி பிப்.25-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு பிப்.15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.