தமிழகத்தின் கோ-ஆப் டெக்ஸ், ஆந்திராவின் ஆப்-கோ ஆகிய இரு கைத்தறி நிறுவனங்களுக்கு இடையே புதிய ஒப்பந்தம் நேற்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கையெழுத்தானது.
விஜயவாடாவில் விற்பனையாளர் – விநியோஸ்தர் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஜவுளி மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஆந்திர கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் சவிதா மற்றும் இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கைத்தறி ஆடை உற்பத்தி, விற்பனை, நெசவாளர் பிரச்சினைகள், அவர்களுக்கு வழங்கப்படும் மானியம், நலத்திட்டங்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து இவ்விரு அமைச்சர்கள் முன்னிலையில் இரு மாநிலங்களுக்கு இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இனி, இரு மாநிலங்களிலும், இரு மாநில கைத்தறி ஆடைகளை விற்பனை செய்ய இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
தமிழகத்தின் கோ-ஆப் டெக்ஸ் கடைகளில் இனி ஆப்-கோ கைத்தறி ஆடைகளும் விற்பனை செய்யப்படும். இதுபோல் ஆந்திராவில் ஆப்-கோ கடைகளில் கோ-ஆப் டெக்ஸ் ஜவுளிகள் விற்பனை செய்யப்படும்.
இரு மாநிலங்களிலும் இந்த வருவாய் ஆண்டில் ரூ.9.20 கோடிக்கு கைத்தறி ஆடைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. விரைவில் பிற மாநிலங்களுடனும் ஆப்-கோ இதுபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர்.