‘கரைகள் தூங்க விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை. மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை’ என்ற பிரபலமான கவிதை வரிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு 100 சதவீதம் பொருந்தக் கூடியதாக மாறியுள்ளது.
இபிஎஸ்சுக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்காததில் தொடங்கிய பரபரப்பு, வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டதை அடுத்து இன்னும் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து செங்கோட்டையன் பங்கேற்ற மூன்று பொதுக்கூட்டங்களில் பேசிய பேச்சுகளை அடிப்படையாக வைத்து, ஊடக விவாதங்கள் பரபரத்தன.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 17-ம் தேதி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த அவரை செய்தியாளர்கள் கேள்விகளால் துளைத்தனர். அப்போது, “பொதுச்செயலாளரிடம் கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் என்னிடம் கேட்கிறீர்களே… நான் ஒரு சாதாராண தொண்டன்” என்று நழுவினார்.
இதனிடையே, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றார். இதை மனதில் வைத்துத்தான் சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக-வின் 82 மாவட்ட அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயரை சேர்க்காமல் விட்டுவிட்டார் இபிஎஸ் என மீண்டும் அவரைச் சுற்றி விவாதங்கள் வட்டமடிக்கின்றன.
தன்னை வைத்துப் பின்னப்படும் சர்ச்சைகள் குறித்து, செங்கோட்டையன் பலமுறை விளக்கமளித்தும், அவரை ‘போராளியாக’ மாற்றியே ஆக வேண்டும் என ஊடகங்கள் கச்சை கட்டுவதாக வருத்தப்படுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். இதுகுறித்து மேலும் பேசிய அவர்கள், “கடந்த ஆண்டு, கட்சியில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் குழுவினருடன் இபிஎஸ்சை சந்தித்து வலியுறுத்தினார் செங்கோட்டையன்.
இப்படியொரு சந்திப்பு நடக்கவே இல்லை என இபிஎஸ் மறுத்த நிலையில், “இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது உண்மை” என செங்கோட்டையன் போட்டுடைத்தது தர்மசங்கடத்தின் முதல் புள்ளியாக அமைந்தது. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் உள்ளார். அவரது கட்டுப்பாட்டில் வரும் அந்தியூர் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ-வான ரமணிதரன் எம்ஜிஆர் மன்ற மாநில இணைச்செயலாளராகவும், கே.பி.எஸ். ராஜா துணைச் செயலாளராகவும் அண்மையில் நியமிக்கப்பட்டனர்.
அதேபோல், அந்தியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வான ஈ.எம்.ஆர்.ராஜா மற்றும் நம்பியூரைச் சேர்ந்த வி.சி.சிவகுமார் ஆகியோர் ஜெ. பேரவை மாநில துணைச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். தனது மாவட்டத்தில், தனது ஆலோசனையைப் பெறாமல் இந்த நியமனங்களைச் செய்தது செங்கோட்டையனை மிகவும் பாதித்தது. இபிஎஸ்சின் பாராட்டு விழாவை புறக்கணிக்க இதுவும் ஒரு காரணம்.
அந்தியூர் தொகுதியில் அதிமுக தோற்க இவர்கள் தான் காரணம் என செங்கோட்டையன் சுட்டிக்காட்டிய நபர்களுக்கு எல்லாம் பதவி கொடுத்தது அவரை ரொம்பவே சங்கடப்படுத்தியது இந்த வருத்தத்தில் தான் அத்தாணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் “துரோகிகளால் அந்தியூர் தொகுதியில் தோற்றோம்” என வெளிப்படையாக செங்கோட்டையன் வெடித்தார்.
இபிஎஸ்சால் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் நான்கு பேரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தற்போது கட்சி அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் இபிஎஸ். ஏற்கெனவே, பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், கட்சி உறுப்பினர் அட்டைகள் முறையாக சென்றடைந்துள்ளதா என்பதை சரிபார்க்கவும் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தற்போது அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பட்டியலில் இருப்பவர்கள் தான்.
இபிஎஸ் அறிவித்துள்ள 82 பொறுப்பாளர்களில் மாவட்ட செயலாளர்கள் யாரும் இடம்பெறவில்லை. எஸ்.பி.வேலுமணி தொடங்கி செங்கோட்டையன் வரை இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த விவரம் தெரியாமல் செங்கோட்டையனை புறக்கணித்ததாக செய்தி வெளியிடுகின்றனர். முதல்வர் தலைமையிலான ‘திஷா’ கமிட்டி கூட்டத்தில் ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் மட்டுமே செங்கோட்டையன் பங்கேற்றார். ஆனால் இதைவைத்து, செங்கோட்டையனுக்கு ஸ்டாலின் தூது என்றெல்லாம் செய்திகளை பரப்பினார்கள்.
அடுத்ததாக, ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்களை நடத்த இபிஎஸ் அறிவித்துள்ளார். இம்மாத இறுதியில் நடக்கும் இக்கூட்டங்களில், கோபியில் செங்கோட்டையன் பேசுகிறார். அந்தியூரில் எஸ்.பி வேலுமணி பங்கேற்கும் கூட்டத்தில், மாவட்டச் செயலாளராக செங்கோட்டையனும் பங்கேற்கிறார். இதையெல்லாம் கருத்தில் கொண்டாவது செங்கோட்டையனை மையப்படுத்தி சர்ச்சைகளைத் கிளப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றனர்.
இவர்கள் இப்படிச் சொன்னாலும், ஜனவரிக்கு முன்பு வரை செங்கோட்டையன் பங்கேற்ற அனைத்துக் கூட்டங்களிலும், “2026-ல் அதிமுக-வை வெற்றி பெறவைத்து இபிஎஸ்சை முதல்வராக்குவோம்” என்று முழங்கினார். ஆனால், கடந்த மூன்று பொதுக்கூட்டங்களில், “அதிமுக ஆட்சி அமைப்போம்” என்று முடித்துக்கொள்வதுடன் மறந்தும் இபிஎஸ் என்ற பெயரை உச்சரிக்கவோ, அவரது ஆட்சியின் சாதனைகளை குறிப்பிடவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.