உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மெட்ரோ ரயில் பாதைக்கு இடையூறாக இருந்த மசூதியை அகற்ற முஸ்லிம்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 168 ஆண்டுகள் பழமையான அந்த மசூதியை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.
மேற்கு உ.பி.யின் மீரட் நகரில் டெல்லி சாலையில் மெட்ரோ ரயிலுக்கான பாதை அமைக்கப்படுகிறது. இப்பணிக்கு ஜெக்தீஷ் மண்டபத்திற்கு அருகில் 1857-ல் கட்டப்பட்ட பழமையான மசூதி இடையூறாக இருந்தது. இதை அகற்றினால் மட்டுமே மெட்ரோ பாதை அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதற்காக அம்மசூதி நிர்வாகத்திற்கு மீரட் ஆட்சியர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும் இதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் தயங்கியபடி இருந்தது.
ஏனெனில் இந்துக்களும் முஸ்லிம்கள் கிட்டத்தட்ட சம அளவில் வாழும் இந்நகரம், மதக்கலவரத்திற்கு பெயர் பெற்றது. இதனால் மீரட் நகர உதவி ஆட்சியர் பிரிஜேஷ் சிங், நகர காவல்துறை எஸ்.பி. ஆயுஷ் விக்ரம்சிங், அப்பகுதி முஸ்லிம்களிடம் நேற்று முன்தினம் தயக்கத்துடன் பேச்சு நடத்தினர். இதில் எந்த மறுப்பும் இன்றி மசூதியை அகற்ற முஸ்லிம்கள் ஒப்புக் கொண்டனர். இத்துடன் அம்மசூதியை தங்கள் செலவிலேயே இடிக்கவும் ஒப்புக்கொண்டனர்.
இந்த மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் தொழுகை நிறுத்தப்பட்டது. மசூதிக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இடிப்பு பணி துவங்கியது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மசூதியின் முத்தவல்லியான ஹாஜி ஷாஹீன் கூறும்போது, “நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பதில் என்றுமே முஸ்லிம்கள் முதலாவதாக நிற்பவர்கள். பிரச்சினையை புரிந்துகொண்டு இடிப்பதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கிறோம். இந்த மசூதி 1857-ல் கட்டப்பட்டதற்கு ஆதாரமாக அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. புதிய மசூதி கட்ட இப்பகுதியில் வேறு இடத்தில் அரசு நிலம் ஒதுக்க வேண்டும்” என்றார்.