புதுடெல்லி: அந்நிய நேரடி முதலீடு விதிமீறல் தொடர்பாக பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு, அமலாக்கத் துறை ரூ.3.44 கோடி அபராதம் விதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், விதிமீறல் காலக்கட்டத்தில் பிபிசியின் ஒளிபரப்புகளை மேற்பார்வையிட்ட அதன் மூன்று இயக்குநர்களுக்கும் தலா ரூ.1.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிபிசி உலக சேவை இந்தியா நிறுவனத்தின் மீது அந்நிய நேரடி முதலீடு மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனது விசாரணையை கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. பிபிசி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய இரண்டு மாதங்களுக்கு பின்பு அமலாக்கத் துறையின் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், “இந்தியாவில் செய்திகள் மற்றும் அன்றாட நிகழ்வுகளை டிஜிட்டல் ஊடகம் மூலமாக ஒளிபரப்பி வரும் பிபிசி உலக சேவை இந்தியா நிறுவனம் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) மூலம் செயல்படும் நிறுவனமாகும். இந்நிலையில், தனது வெளிநாட்டு நேரடி முதலீட்டை 26 சதவீதமாக பிபிசி நிறுவனம் குறைக்கவில்லை. இது இந்திய அரசின் விதிகளை முழுமையாக மீறுவதாக அமைந்தது. இது தொடர்பாக அந்நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டது” என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்நிய நேரடி முதலீடு மேலாண்மைச் சட்டத்தின் கீழ் விதிமீறலுக்காக பிபிசி உலக சேவை இந்தியா நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை அபராதம் விதித்துள்ளது. அந்நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை ரூ.3,44,48,850 ஆகும்.
இதனிடையே, பிபிசியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இதுவரை பிபிசி உலக சேவை இந்தியா மற்றும் அதன் இயக்குநர்கள் யாருக்கும் அமலாக்கத் துறையில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. இந்தியா உட்பட பிபிசி நிறுவனம் செயல்படும் அனைத்து நாடுகளில் அங்குள்ள விதிகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்று உறுதியுடன் நாங்கள் இருக்கிறோம். அப்படி ஏதாவது விதிமீறல் தொடர்பான உத்தரவுகள் வழங்கப்பட்டால் அதனை கவனமாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுப்போம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தின் கோத்ராவில் நிகழ்ந்த ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்கள் குறித்தும், இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலைமை குறித்தும் பிபிசி ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்தது. ‘இந்தியா: மோடி கேள்வி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் இரண்டு பகுதிகளாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்த ஆவணப்படத்துக்கு பாஜக தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருமானவரித் துறை இந்தியாவில் உள்ள பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் 2023 பிப்ரவரியில் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.