கான் யூனிஸ்: ஹமாஸ் அமைப்பினர் மேலும் 6 இஸ்ரேல் பிணைக் கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி, பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் படிப்படியாக விடுவித்து வருகின்றனர். பதிலுக்கு பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது.
அந்த வகையில், நியூசீரத் நகரிலிருந்த ஒமர் வென்கெர்ட், ஒமர் ஷெம் டோவ் மற்றும் எலியா கோஹென் ஆகிய 3 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் நேற்று ஒப்படைத்தனர். போலி ராணுவ உடையில் இருந்த அவர்கள் வாகனம் மூலம் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக 2 பிணைக் கைதிகள் ராபா நகரிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதுதவிர, ஹிஷாம் அல்-சயீத் என்பவரும் காசா நகரிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒப்பந்தப்படி விடுவிக்கப்பட வேண்டிய 33 பிணைக்கைதிகளில் இந்த 6 பேர்தான் கடைசி என கூறப்படுகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி காசா எல்லையை ஒட்டிய இஸ்ரேல் பகுதியில் நடைபெற்ற ஒரு இசைக் கச்சேரியில் புகுந்த ஏராளமான ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அத்துடன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த வெளிநாட்டினர் உட்பட ஏராளாமான இஸ்ரேலியர்களை அவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.