பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழகம் முழுவதும் இருந்தும் 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, குழு காப்பீடு, மகப்பேறு விடுப்பு, பணிப் பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கம் (ஷிப்ட் 1 மற்றும் ஷிப்ட் 2) சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன்பு நேற்று கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.அருணகிரி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாநில தலைவர் பி.செந்தில்குமார், மாநில துணை தலைவர் எஸ்.வசந்தகுமார், துணை பொதுச்செயலாளர் எச்.புவனேஸ்வரி, பொருளாளர் எஸ்.பவானி உள்பட 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயினார் ஆகியோர் பேசினர்.
கவுரவ விரிவுரையாளர் நலச் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அருணகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 7,374 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிக அடிப்படையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். எங்களின் தலையாய கோரிக்கையான பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
எங்களை பணிநிரந்தரம் செய்யவும், ஊதிய உயர்வு வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு அந்த உத்தரவை நிறைவேற்றாமல் காலதாமதம் செய்து வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.