போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வாட்டிகன் அறிவித்துள்ளது. நீண்ட காலமாக ஆஸ்துமா போன்ற சுவாச நோயால் அவதிப்பட்டுவந்த அவர், நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்றுக்குச் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
வாட்டிகன் நகரின் ஹோலி சீ பத்திரிகை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, 88 வயது போப் சுயநினைவுடன் உள்ளார். அவருக்கு உதவியாக அதிகப்படியான ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
அவரது ரத்தத்தில் ப்ளேட்லெட்டுகள் மிகக் குறைவாக இருந்ததால், ரத்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட கால நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ், அது தொடர்பாகக் குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சுக் குழல் அழற்சியால் பாதிக்கப்பட்டார். பிப்ரவரி 14ம் தேதி ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், ஒரு வாரத்துக்கும் மேல் நீடிக்கும் அழற்சியால் அவதிப்பட்டு வருகிறார்.

“தூய தந்தையின் நிலை மோசமாகவே இருக்கிறது. அவர் ஆபத்தில் உள்ளார்” என வாடிகன் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாள்களை விட தற்போது அதிக வலியை உணரும் போப் பிரான்சிஸுக்கு ஆக்ஸிஜனைக் குறைத்தும், அதிகரித்தும் நுரையீரல் சிக்கலைச் சமாளித்து வருகின்றனர்.
நிமோனியா பாதிப்பால் ஸ்பெசிஸ் என்ற ரத்தத்தில் நச்சு உருவாகும் நிலை ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Pope பதவி விலகுகிறாரா?
போப் பிரான்சிஸ் ராஜினாமா செய்யவிருக்கிறார் எனப் பரவு வதந்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக வாடிகன் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கார்டினல் பியட்ரோ பரோலின் நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ராஜினாமா தொடர்பான வதந்திகளை ‘பயனற்றவை’ என்றும், போபின் உடல் நிலைதான் இப்போது முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.
வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
